Athayi Online University

Author name: Athayi Online Unviersity

அல்அஹாதீஸுல் குத்ஸியா (ஹதீஸ் அல் குத்ஸீ-தொகுப்பு)

அல்அஹாதீஸுல் குத்ஸியா (ஹதீஸ் அல் குத்ஸீ-தொகுப்பு) .   بسم الله الرحمن الرحيم தமிழாக்கம்: ம. அ. முகம்மது முகைதீன் உள்ளடக்கம்: அல்அஹாதீஸுல் குத்ஸியா அறிமுகம் அல்லாஹ்வை நினைவு கூர்தல், ஓரிறைக் கொள்கை ஆகியவற்றின் சிறப்பு பற்றி… சரியான கொள்கை பற்றி நற்செயல்களை செய்வதன் கூலியை இரட்டிப்பாக தருவதில் அல்லாஹ்வின் சங்கையை பெற்றவர் பற்றி அல்லாஹ்வைப் பற்றி நல்லெண்ணம் கொள்வது பற்றி நல்லடியார்களுக்கு அல்லாஹ் ஏற்பாடு செய்து வைத்துள்ளவை பற்றி அல்லாஹ் தன் அடியானை பிரியம் கொள்வது அதற்கு அடையாளம் இதர மக்கள் பிரியம் கொள்வது இறைநேசர்களை நோவினை செய்பவனுக்கு கூலி மற்றும் அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி… அல்லாஹ்வை அஞ்சுவது, பயப்படுவது, பாவங்கள் மன்னிக்கப்பட உள்ள காரணங்களில் உள்ளதாகும் அல்லாஹ், உறவு (என்ற) பண்புடன் நேரில் பேசியது பற்றி தொழுகை சம்பந்தப்பட்ட ஹதிஸ்கள் லுஹா தொழுகையின் சிறப்பு பரிந்துரைத்தல் பற்றிய ஹதீஸ்கள் நூல் அறிமுகம் அல் அஹாதீஸுல் குத்ஸிய்யா என்பது இந்நூலின் பெயராகும். ‘ஹதீஸ் குத்ஸிகள் மட்டும் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்ளது. இந்நூலை பெய்ரூத்தில் உள்ள ”அல்மக்தபதுத் தகாஃபிய்யாகிவினர் வெளியிட்டுள்ளனர். அல்முத்தா, புகாரி, முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜாவில் உள்ள ஹதீஸ் குத்ஸிகள் மட்டுமே இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதை தொகுத்தவர் யார்? என்ற விபரம் மூல நூலில் இல்லை. இந்நூலில் 400 ஹதீஸ்கள் உள்ளன. ஹதீஸ்களின் துவக்கத்திலேயே இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ள நூல் பற்றிய விபரம் இடம் பெறுகிறது. எனினும் நாம் அதை ஹதீஸின் இறுதியிலேயே இடம் பெறச் செய்துள்ளோம். நபி(ஸல்)அவர்களின் சொல், செயல் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்படடவை என நபித்தோழர்களால் அறிவிக்கப்படுவதை அனைத்தும் ‘ஹதீஸ்’ என்று கூறப்பட்டும். ஆனால், இறைவன் கூறியதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என நபித்தோழர் மூலம் அறிவிக்கும் செய்திக்கே ‘ஹதீஸ் குத்ஸீ’ என்று கூறப்படும். மேலும், இறைவன் கூறிய அதே வாசகங்களுடன் ஜிப்ரில் (அலை) அவர்கள் மூலம் வந்ததே ‘குர்ஆன்’ என்னும் வேதநூலாகும். ஆனால், இறைவன் கூறினாலும் நபி(ஸல்) அவர்கள் தன்சொந்த வாசகங்களுடன் கூறும் செய்தியே ‘ஹதீஸ் குத்ஸி’ எனப்படும். இதில் ஜிப்ரில்(அலை) அவர்களும் சம்பந்தப்பட மாட்டார்கள். எனவே குர்ஆன், ஹதீஸ், ஹதீஸ் குத்ஸீ இவைகள் வெவ்வேறானவை என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளவும். இந்நூலில் சில ஹதீஸ்கள் மீண்டும், மீண்டும் இடம் பெற்றுள்ளன. வேறு, வேறு வாசகங்களாக அவை வெவ்வேறு நூலில் உள்ளதால் நாமும் அப்படியே மீண்டும், மீண்டும் மொழியாக்கம் செய்துள்ளோம். அல்லாஹ்வை நினைவு கூர்தல், ஓரிறைக் கொள்கை ஆகியவற்றின் சிறப்பு பற்றி… ஹதீஸ் எண் :1  அல்லாஹ்விடம் சில வானவர்கள் உண்டு அவர்களின் நடைபாதைகளில் அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களை தேடியவர்களாக சுற்றி வருவார்கள். அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களைக் கண்டால் ”நீங்கள் தேடியவை பக்கம் வாருங்கள் என ஒருவருக்கொருவர் தங்களிடையே கூறிக் கொண்டு, தங்களின் இறக்கைகளால் வானத்தின் பால் அம்மக்களை சூழ்வார்கள். அவர்களை நன்கு அறிந்தவனாக அல்லாஹ் அவர்களிடம் என் அடியார்கள் என்ன கூறுகிறார்கள்? என்று கேட்பான். ”உன்னை அவர்கள் ‘சுப்ஹானல்லாஹ்’ என்று கூறி தூய்மைப் படுத்துகிறார்கள். ‘அல்லாஹு அக்பர்’ என்று கூறி உன்னை பெருமைப் படுத்துகிறார்கள். அல்ஹம்து லில்லாஹ் என்று கூறி உன்னை புகழ்கிறார்கள். உன்னை புகழுக்குரிய வார்த்தைகளால் உயர்வு படுத்துகிறார்கள் என்று வானவர்கள் கூறுவர். என்னை பார்த்து இருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். ”இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உன்னை அவர்கள் பார்த்ததில்லைம் என்று வானவர்கள் கூறுவர். என்னை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? என்று அல்லாஹ் கேட்பான்.”உன்னை அவர்கள் பார்த்திருந்தால் உன்னை வணங்குவதில் கடுமையாக நடந்து கொள்வார்கள். உன்னை புகழ்வதில் பெருமைப் படுத்துவதில் உன்னை தூய்மைப் படுத்துவதில் அதிகமாக நடந்து கொள்வார்கள் என்று வானவர்கள் கூறுவர். என்னிடம் அவர்கள் என்ன கேட்கிறார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் சொர்க்கத்தை கேட்கிறார்கள் என்று வானவர் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். இல்லை, அல்லாஹ்வின் மீது ஆணையாக! இறைவா! அதை அவர்கள் பார்த்திருந்தால் அதன் மீது அதிகப் பேராசை கொள்வார்கள். இன்னும் அதிகமாக அதைத் தேடுவார்கள் என்று வானவர்கள் கூறுவார்கள். எதிலிருந்து அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள் என்று அல்லாஹ் கேட்க ”நரகத்திலிருந்தும் என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். ”இல்லை, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இறைவா! அதை அவர்கள் பார்த்ததில்லை என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருந்தால் அதிலிருந்து விலகவும், அதை அஞ்சவும் என கடுமையாக நடந்து கொள்வார்கள் என்று மலக்குகள் கூறுவர். ”நான் அவர்களை மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன் என்று அல்லாஹ் கூறுவான். அப்போது வானவர்களில் ஒருவர் ”மக்களில் ஒருவர் உம்மை நினைவு கூர்ந்தவர்களில் இல்லை. தன் தேவைக்காகவே (அவ்விடத்திற்கு) வந்தார். (அவருக்குமா மன்னிப்பு உண்டு) என்று கூறுவார். ”அவர்களும் அந்த இடத்தில் அமர்ந்திருந்தவர்கள் தான்! அவர்களுடன் உட்கார்ந்தவர் அவர்களுக்கு (பயனில்) குறை ஏற்படுத்தி விட மாட்டார். இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். (”அல்லாஹ்வின் சிறப்பும் என்ற பாடத்தில் ‘புகாரி’ நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது) ஹதீஸ் எண்:2 இறைவனை நினைவு கூறும் இடங்களை தேடி சுற்றி வரும் வானவர்கள் அல்லாஹ்விடம் உண்டு. இறைவனை நினைவு கூறும் இடத்தை அந்த வானவர்கள் கண்டால் அவர்களோடு உட்கார்வார்கள். அவ்வானவர்களில் சிலர் சிலரை தங்களின் இறக்கைகளால் இணைப்பார்கள். இதனால் அவர்களுக்கும், வானத்திற்கும் இடையே உள்ளதை நிரப்பி விடுவார்கள். இறைவனை நினைவு கூறுவோர் பிரிந்தும், இவர்கள் வானத்தின் பக்கம் விரைந்த உயர்வார்கள். அவர்களை நன்கு அறிந்த அல்லாஹ் அவர்களிடம் எங்கிருந்து வருகிறீர்கள்? என்று கேட்பான். ”பூமியில் உள்ள உன் அடியார்களிமிருந்து வருகிறோம். அவர்கள் உன்னை தூய்மைப் படுத்துகிறார்கள். உன்னை புகழ்கிறார்கள். உன்னிடம் கேட்கவும் செய்கிறார்கள் என்று வானவர்கள் கூறினர். என்னிடம் அவர்கள் கேட்பது என்ன? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் உன் சுவர்க்கத்தைக் கேட்கிறார்கள் என்று வானவர்கள் கூறுவர். எனது சொர்க்கத்தை அவர்கள் பார்த்துள்ளனரா? என்று அல்லாஹ் கேட்பான். ”இறைவா! இல்லை என்பர் வானவர்கள். எனது சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் எப்படி நடப்பார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் பாதுகாப்பு தேடுவார்கள் என்று வானவர்கள் கூறுவர். எதிலிருந்து பாதுகாப்பு தேடுவார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். இறைவா! உன் நரகத்திலிருந்து தான் என்று வானவர்கள் கூறுவர். எனது நரகத்தை பார்த்துள்ளனரா? என்று அல்லாஹ் கேட்பான். ”இல்லை என்று வானவர்கள் கூறுவர். எனது நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் என்ன செய்வார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். உன்னிடம் மன்னிப்புக் கோருவார்கள் என்று வானவர்கள் கூறுவர். நான் அவர்களை மன்னித்து விட்டேன். அவர்களை மன்னித்து விட்டேன். அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்து விட்டேன் என்று அல்லாஹ் கூறுவான். அப்போது வானவர்கள் ” இறைவா! அவர்களில் ஒருவர் இருந்தார். அவர் தவறான செயல் கொண்ட மனிதர், அவர் (வேறு வேலையாக) வந்தவர் அவர்களுடன் உட்கார்ந்து கொண்டார். (இவருக்குமா மன்னிப்பு உண்டு?) என்று கூறுவர். அவரையும் மன்னித்துவிட்டேன். அவர்களுடன் உட்கார்ந்திருந்தவர் அவர்களுக்கு குறைவை ஏற்படுத்தி விட மாட்டார். இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (இது ”இறைவனை நினைவு கூரும் இடங்களின் சிறப்பும் என்ற பாடத்தின் கீழ் ‘முஸ்லிம்’ நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.) ஹதீஸ் எண்: 3 மக்களின் (செயல்களை எழுதும்) எழுத்தாளர்(களான வானவர்)கள் நீங்கலாக பூமியில் சுற்றி வரும் வானவர்கள் சிலர் அல்லாஹ்வுக்கு உண்டு. அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூரும் மக்களை கண்டு விட்டால் ”நீங்கள் தேடியதின் பக்கம் வாருங்கள்” என்று ஒருவருக்கொருவர அழைத்துக் கொள்வார்கள். அவர்களை சூழ்ந்திருந்த அவர்கள் பூமியின் வானத்தின் பக்கம் வருவார்கள். என் அடியார்களை என்ன செய்து கொண்டிருக்கும் போது விட்டு வந்தீர்களா? என்று அல்லாஹ் கேட்பான். அவர்கள் உம்மை நினைவு கூருபவர்களாகவும், மேன்மை படுத்துபவர்களாகவும், உம்மை புகழ்பவர்களாகவும் விட்டு வந்தோம்” என்று வானவர்கள் கூறுவர். என்னை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். சொர்க்கத்தை தேடுகிறார்கள் என்று வானவர்கள் கூறுவர். அதை அவர்கள் பார்த்திருக்கிறார்களா? என்று அல்லாஹ் கேட்பான். இல்லை என்பார்கள். அதை அவர்கள் பார்த்திருந்தால் எப்படி நடந்து கொள்வார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். அதை அவர்கள் பார்த்திருந்தால் அதை தேடுவதில் அதிக சிரத்தை எடுத்திருப்பார்கள் என்று வானவர்கள் கூறுவர். எதிலிருந்து அவர்கள் பாதுகாப்புத் தேடுகிறார்கள்? என்று அல்லாஹ் கேட்பான். நரகத்தில் இருந்து பாதுகாப்புத் தேடுகின்றனர் என்று கூறுவார்கள். அதை அவர்கள் பார்த்துள்ளார்களா? என்று அல்லாஹ் கேட்பான். இல்லை என்பார்கள். அதை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் எப்படி நடந்து கொள்வர்? என்று அல்லாஹ் கேட்பான். ”அதை அவர்கள் பார்த்திருந்தால் அதை அஞ்சுவதில், பயப்படுவதில், பாதுகாப்புத் தேடுவதில் அதிக கவனம் செலுத்தி இருப்பார்கள்” என்று வானவர்கள் கூறுவர். அவர்களை மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன் என்று அல்லாஹ் கூறுவான். அப்போது வானவர்கள் ”அந்த மக்களில் ஒரு தவறான மனிதர் இருந்தார். அவர் இவர்களுடன் (உம்மை தியானிக்க) வந்தவரல்ல, வேறு ஒரு தேவைக்காக வந்தவர். (உட்கார்ந்து கொண்டார். இவருக்கும் மன்னிப்பு உண்டா) என்று கூறுவர். ”அம்மக்களில் எவருக்கும் உட்கார்ந்தவர் குறைவை ஏற்படுத்திவிட மாட்டார் என்று அல்லாஹ் கூறுவான். இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அபூஸயீத் அல்குத்ரி (ரலி) அறிவிக்கின்றார்கள். இதை இமாம் திர்மிதி ”ஹஸன் ஸஹீஸ்” என்று கூறிகிறார்கள். (பூமியின் சுற்றிவரும் மலக்குகள் அல்லாஹ்விற்கு உண்டு என்ற பாடத்தின் கீழ் திர்மிதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது) ஹதீஸ் எண்:4 ஒரு மனிதன் ”லாயிலாஹ இல்லல்லாஹ் வல்லாஹு அக்பர்” என்று கூறினால், ”எனது அடியான் உண்மையை கூறினார். என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை. அல்லாஹ்வாகிய நான் தான் மிகப் பெரியவன்” என்று அல்லாஹ் கூறுவான். ஒரு மனிதன், ”லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தகு” என்று கூறினால், ”என் அடியான் உண்மையே கூறினான். தனித்தவனான என்னைத் தவிர வேறு கடவுள் இல்லை” என்று அல்லாஹ் கூறுவான். ஒரு மனிதன் ”லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தகு லாஷாரிகலகு” என்று

அல்அஹாதீஸுல் குத்ஸியா (ஹதீஸ் அல் குத்ஸீ-தொகுப்பு) Read More »

இமாம் அன்-நவவி (ரஹ்) அவர்களின் நாற்பது நபிமொழிகள்

இமாம் அன்-நவவி (ரஹ்) அவர்களின் நாற்பது நபிமொழிகள் . நாற்பது நபிமொழிகள் தொகுப்பு : இமாம் யஹ்யா ஷரஃபுத்தீன் அந்நவவி (தமிழாக்கம் : எம்.குலாம் முஹம்மது) இமாம் அன்-நவவி (ரஹ்) அவர்களின் முன்னுரை: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம். அல்லாஹ்வின் தூதர் உங்களிடம் கொண்டு வந்திருப்பதை எடுத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 59:07) புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. அவனே அகிலத்தின் அதிபதி. ஆகாயம், பூமி இவைகளின் நிரந்தர பாதுகாவலன். படைக்கப்பட்டவர்களை பாதுகாப்பவன். பராமரிப்பவன். இறக்கச் செய்பவன். இறைவனின் வழிகாட்டுதலை வழங்குவதற்காகவும் இறைச் சட்டத்தை தாங்கள் வழிகாட்ட வந்த மக்களுக்கு எடுத்துச் சொல்லிடவும், தெளிவான அத்தாட்சிகளைத் தந்திடவும். இறை-தூதர்களை (அலலாஹ்வின் ஆசியும், அருளும், சாந்தியும் சமாதானமும் இறைத்தூதர்கள் அனைவர் மீதும் உண்டாவதாகுக) அனுப்பியவன். அல்லாஹ் அருளிய கிருபைகளுக்கு அவனையே புகழ்கிறேன். அவன் தனது அருட்கொடைகளை இன்னும் அதிகப்படுத்திட அவனிடம் இறைஞ்சுகிறேன். அல்லாஹ்வைத் தவித வேறு இறைவன் இல்லை என்று நான் சாட்சியம் கூறுகிறேன். அவன் ஒருவனே, அவனுக்கு இணையில்லை. அவனே படைத்தவன், பரிபாலிப்பவன், பாதுகாப்பவன், போஷிப்பவன், அவன் அருளாளன், மன்னிப்பவன். நமது தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் அந்த ஏக இறைவனின் நல்லடியாராவார்கள், அவனது தூதராவார்கள். முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது அன்புக்கும் அருளுக்கும், பாத்திரமானவர்கள். படைப்பினங்களிலெல்லாம் உயர்ந்தவராவார்கள். அவர்கள், வாழும் அற்புதமாகிய திருக்குர்அனால் பெருமைப்படுத்தப்பட்டவராவார்கள். நமது தலைவர் பெருமானார் (ஸல்) அவர்கள் சுருக்கமாகவும், விளக்கமாகவும் பேசுபவர்களாக இருந்தார்கள். (இறைவனின் ஆசியும், அருளும், சாந்தியும், சமாதானமும் இறைவனின் தூதர் அவர்கள்மீதும், இன்னும் ஏனைய இறைத்தூதர்கள் மீதும், இறைவனின் நல்லடியார்கள் மீதும் உண்டாவதாக!) அலி இப்னு அபீதாலிப் (ரலி), அப்துல்லா இப்னு மஸ்ஊது (ரலி), முஆது இப்னு ஜபல் (ரலி), அபுதர்தா (ரலி), இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் இப்னு மாலிக் (ரலி), அபூஹுரைரா (ரலி), அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) ஆகியோரின் ஆதாரங்களோடு பின்வரும் நபிமொழி நமக்குக் கிட்டியுள்ளது. அதாவது, பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் : ”என்னுடைய உம்மத்துக்களுக்காக மார்க்கம் சம்பந்தப்பட்ட நாற்பது ஹதீதுகளை எவர் மனனம் செய்துப் பாதுகாத்து வைக்கின்றாரோ அவரை அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் மார்க்க அறிஞர்கள் சட்ட வல்லுநர்கள் ஆகியோர்களின் கூட்டத்தில் எழச் செய்வான்””. பிரிதொரு நபிமொழியில் ”அல்லாஹ் அவனை மார்க்க அறிஞனாகவும், மார்க்க சட்ட வல்லுநனாகவும் எழச் செய்வான்”” எனச் சொல்லப்பட்டுள்ளது. அபுத்தர்தா அவர்களின் வார்த்தையில், ”இறுதித் தீர்ப்பு நாளில் நான் அவருக்கு (நாற்பது நபிமொழிகளை மனனம் செய்து ஏனையோருக்கு தெரிவிப்பவர்) சாட்சியாகவும், பரிந்துரை செய்பவராகவும் இருப்பேன்””, இப்னு மஸ்ஊது (ரலி) அவர்களின் வார்த்தையில், நாற்பது நபிமொழிகளை மனனம் செய்து எனது மக்களுக்காக சேகரித்து வைப்பவர்களிடம் ”சுவர்க்கத்தில் நீங்கள் விரும்பும் வாசல் வழியே நுழையுங்கள் என்றும் சொல்லப்படும்””. இப்னு உமர் (ரலி) அவர்களின் வார்த்தையில், ”அவர் (நாற்பது நபிமொழிகளை மக்களுக்கு சேகரித்து வைப்பவர்) மார்க்க அறிஞர்கள் கூட்டத்தில் குறித்து வைக்கப்படுவார், மேலும் அவர் இறைவனின் பாதையில் மடிந்த தியாகிகளின் வரிசையில் எழுப்பப்படுவார்”” என்றும் வருகிறது. (எனினும் இந்த கடைசி ஹதீதுக்கு ஆதாரங்கள் தரப்பட்டிருப்பினும் அது பலவீனமான ஹதீதுகளின் பட்டியலில் இடம் பெறுவதாக அறிஞர்கள் ஒருமித்த கருத்துக் கொண்டுள்ளனர்). நபிமொழிகளை தொகுத்துத் தருவதில் எண்ணற்ற மார்க்க அறிஞர்கள் ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கின்றார்கள். எனினும் எனக்குத் தெரிந்தவரை இந்தப் புனிதப்பணியை முதன் முதலாகச் செய்தவர்கள் அப்துல்லா இப்னு அல் முபாரக் ஆவார்கள். தொடர்ந்து இறைஞான அறிஞராக இப்னு அஸ்லாம் அத்-தூஸி, பின்னர் அல் ஹஸன் இப்னு சுஃப்யான்-அன் நஸயீ, அபூபக்ருல் ஆஜுரி, அபூபக்ரு முஹம்மத் இப்னு இப்ராஹீம் அல் அஸ்ஃபஹானி, அத்-தாரகுத்னீ, அல் ஹாக்கிம், அபூநுஐம், அபூஅப்துற்றஹ்மான் அஸ்சுலமீ, அபூ சயீதுல் மாலீனீ, அபூ உத்மான் அஸ்-சாபூனி, அப்துல்லாஹ் இப்னு முஹம்மத் அல் அன்சாரி, அபூபக்ரு அல்பைய்ஹக்கீ போன்ற முற்காலத்தவரும், பிற்காலத்தவருமான எண்ணற்றொரும் இப் பணியைச் செய்திருக்கிறார்கள். இந்த நாற்பது நபிமொழிகளையும் மார்க்க அறிஞர்கள், இஸ்லாத்தின் காவலர்கள் ஆகியோர் ஆக்கி வண்ணம், தொகுத்திட நான் இறைவனின் துணையைத் தேடியிருக்கிறேன். நல்லவைகளை செய்வதைப் பொறுத்தவரை பலவீனமான நபிமொழியை செயல்படுத்துவதும் அனுமதிக்கப்பட்ட ஒன்றேயென்று மார்க்க அறிஞர்கள் ஒத்துக் கொண்டிருக்கின்றார்கள். இருந்த போதிலும் நான் மேலே குறிப்பிட்ட பலவீனமாக நபிமொழிகளில் முற்றாகச் சார்ந்திருக்கவில்லை. ”உங்களில் எவர் இங்கே என்னுடைய சாட்சியாக இருக்கின்றார்களோ அவர்கள் இங்கே இல்லாதவர்களுக்கு எடுத்துச் சொல்வீர்களாக”” என்ற பெருமானார் (ஸல்) அவர்களின் மொழியின் மீதும், ”நான் சொன்னவைகளைச் கேட்டு அவைகளை மனனம் செய்து, அவைகளை அப்படியே அடுத்தவர்களுக்குகம் சொல்லுகின்றவர்களின் முகத்தை இறைவன் பிரகாசம் மிக்கதாக ஆக்குவானாக!”” எனற நபிமொழியின் மீதும் ஆதரவு வைத்தே நான் இதனைத் தொகுத்திருக்கிறேன். இதைப் போலவே பல மார்க்க அறிஞர்கள் மார்க்கத்தில் பல்வேறு பொருள்கள் குறித்தும் நாற்பது நபிமொழிகளை தொகுத்துத் தந்துள்ளார்கள். உதாரணமாக, அறப்போர் (ஜிஹாத்), இறைநம்பிக்கை, நல்லொழுக்கம் இவைகள் ஒவ்வொன்றும் குறித்து நாற்பது நபிமொழிகள் கொண்ட தொகுப்புகள் வெளிவந்துள்ளதைக் குறிப்பிடலாம். இவைகள் அனைத்தும் இறைவனின் பாதையில் மேற்கொள்ளப்பட்ட அரிய முயற்சிகளேயாகும். இறைவன் இவர்கள் அனைவருக்கும் நற்கூலியைத் தந்தருள்வானாக. நான் இவைகளை விட முக்கியமான, இவையனைத்தையும் பிரதிபலிக்கும் நாற்பது நபிமொழிகளைத் தொகுத்துத் தருவது சிறப்பான செயலாகும் என்று கருதினேன். ‘மார்க்கத்தின் அச்சாணி என்றும், இஸ்லாத்தின் பகுதி”என்றும் அதில் ‘மூன்றிலொரு பகுதி” என்றும் இன்னும் இதுபோல மார்க்க அறிஞர்களால் உயர்ந்தனவாகக் கருதப்பட்ட நாற்பது நபிமொழிகளையே தேர்ந்தெடுத்து தொகுத்துள்ளேன். இந்த நாற்பது நபிமொழிகளையும் பலமான நல்ல நபிமொழிகள் என்றே கொள்ள வேண்டும். இவைகளில் பெரும்பாலானவை ஸஹீஹ் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம் ஆகிய நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. மனனம் செய்து கொள்வதற்கு எளிதாக இருக்கவும் நிறைவான பலன்களை அடைந்திடவும் ஆதாரங்களின் தொடர்ச்சியை சுருக்கமாகவும் தந்திருக்கிறேன். இறைவனுக்கு அடிபணிவது குறித்து இந்த நபிமொழிகள் தரும் வழிகாட்டுதல்களுக்காகவும், இந்த நபிமொழிகள் தரும் வழிகாட்டுதல்களின் முக்கியத்துவத்திற்காகவும் இவைகள் மறுமைப் பேற்றை விரும்பும் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். இறைவனிடமிருந்தே நான் உதவி தேடுகின்றேன். அவனையே நான் சார்ந்திருக்கின்றேன். அவனிடமே நான் அடைக்கலம் தேடுகின்றேன். எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. வெற்றியும் பாதுகாவலும் அவனிடமே இருக்கின்றது. நபிமொழி – 1 அபூ ஹப்ஸ் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாகச் சொல்கிறார்கள். செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதன் பயனையே அடைகின்றான். ஆகவே ஒருவர் இறைவனுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவும் ஹிஜ்ரத் செய்வாரேயானால் அது அல்லாஹ்வுக்காகவும் அவனது திருத்தூதருக்காகவுமே இருக்கும். ஒருவர் ஹிஜ்ரத் செய்வது சில உலக இலாபங்களுக்காக என்றால், அல்;லது ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதற்காகத் தான் என்றால் அவர் அதற்கான பலனையே அடைவார். (புகாரீ, முஸ்லிம்) இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா (ஆட்சித்தலைவர்) ஆவார்கள் ஏதேனும் ஒரு இலட்சியத்திற்காக ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்குச் செல்வது நபிமொழி – 2 உமர் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள் : ஒருநாள் நாங்கள் எல்லோரும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது எங்கள் முன் ஒருவர் வந்து நின்றார். அவருடைய ஆடைகள் மிகைத்த வெளுமையுடன் காணப்பட்டன. அவருடைய தலைமுடி மிகைத்த கருமை நிறத்துடன் காணப்பட்டது. பயணம் செய்ததற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடம் காணப்படவில்லை. எங்களில் யாருக்கும் அவரைத் தெரியாது. அவர் நடந்து சென்று பெருமானர் (ஸல்) அவர்களின் முன் அமர்ந்தார். அவரது முழங்கால்களை பெருமானார் (ஸல்) அவர்களின் முழங்கால்களுக்கு எதிராகவும் கைகளைக் கால்களின் மீதும் வைத்து அமர்ந்தார். பின்னர் பெருமானார் (ஸல்) அவர்களை நோக்கி ‘முஹம்மதே, இஸ்லாத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்” என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சியம் கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது. ஜகாத் கொடுப்பது, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, உங்களால் முடிந்தால் ஹஜ் (இறைவன் இல்லத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது) செய்வது இவைகளாகும் என்றார்கள். இதற்கு அவர் நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்றார். நாங்கள் அவர் அப்படி வினவியது குறித்தும் அ வரே உண்மைப்படுத்தியது குறித்தும் ஆச்சரியம் கொண்டோம். பின்னரவர் ஈமான் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். ”அது அல்லாஹ்வின் மீதும் அவனது வானவர்கள், அவனது வேதங்கள், அவனது தூதர்கள், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொள்வதும், நல்லவைகளும் தீயவைகளும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும் என்று நம்புவதுமாகும்”” என்பதாக பெருமானார் (ஸல்) அவர்கள் பதில் தந்தார்கள். இதைக் கேட்ட அவர் நீங்கள் சரியாகவே பேசினீர்கள் என்றார். தொடர்ந்து அவர் இஹ்ஸான் (நல்ல செயல்கள்) பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்றார். “நீங்கள் அல்லாஹ்வை பார்க்காத போதும் அவனை நேரில் பார்த்து தொழுவது போல் தொழுவதாகும். நீங்கள் அவனைப் பார்க்காத போதிலும் அவன் மெய்யாகவே உங்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்” எனச் சொன்னார்கள். பின்னர் அவர் எனக்கு அந்த நேரம் (நியாயத் தீர்ப்பு நாள்) குறித்துச் சொல்லுங்கள் என்றார். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ‘இந்தக் கேள்வி கேட்கப்படுபவர் கேட்பவரை விட அதிகமாக அறிந்தவர் அல்லர்” என்றார்கள். (அல்லாஹ் அதை அறிவான் என்பது கருத்து). பின்னர் அவர் அதன் அடையாளங்கள் குறித்து எனக்குச் சொல்லுங்கள் என்றார். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னதாவது, ”அடிமைப்பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள். அப்போது காலணிகளில்லாத, ஆடைகளற்ற, ஆதரவற்ற கூட்டத்தினர் ஆடம்பரமாக கட்டிடங்களைக் கட்டுவதில் போட்டி போட்டுக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். பிறகு அவர் போய் விட்டார். நான் அங்கேயே தாமதித்தேன். பிறகு பெருமானார் (ஸல்) அவாகள், ‘உமரே கேள்விகளைக் கேட்டவர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா” எனக் கேட்டார்கள். ‘அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்றாக அறிவார்கள்” என்றேன் நான். பெருமானார் (ஸல்) அவர்கள், அவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். அவர் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக வந்தார்”” என்று கூறினார்கள். – முஸ்லிம் அடிக்குறிப்புகள் : உமர் : இஸ்லாத்தின் இரண்டாவது கலீபாவான உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்களைக் குறிக்கும். ஜகாத் : இந்தச் சொல்

இமாம் அன்-நவவி (ரஹ்) அவர்களின் நாற்பது நபிமொழிகள் Read More »

அல் முஅத்தா நபிமொழித் தொகுப்பு

அல் முஅத்தா நபிமொழித் தொகுப்பு இமாம் மாலிக் (ரஹ்) அவர்களின்அல் முஅத்தா நபிமொழித் தொகுப்பு மொழிபெயர்ப்பாளர்: K.M. முஹம்மத் மொஹைதீன் (உலவி) அத்தியாயம்: 1 தொழுகையின் நேரங்கள் பாடம்: 1 தொழுகையின் நேரங்கள் எண் 1: உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள் ஒருநாள் தொழுகையைத் தாமதப்படுத்தினார்கள். அவர்களிடம் உர்வா இப்னு ஸுபைர் வந்து (பின்வரும் நிகழ்ச்சியைக்) கூறினார்கள். முகீரா இப்னு ஷுஹ்பா(ரலி) அவர்கள் கூபாவில் இருக்கும் போது, ஒருநாள் தொழுகையை தாமதப்படுத்திய போது அவரிடம் அபூ மஸ்ஊத்(ரலி) அவர்கள் வந்து, ”முகீரா! இது என்ன? (தொழுகையைத் தாமதப்படுத்துகிறீரே என்று கூறி விட்டு), ஜிப்ரில் (அலை) அவர்கள் இறங்கி வந்து, தொழ வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்பு ஜிப்ரில் (அலை) தொழ வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்பு ஜிப்ரில் (அலை) அவர்கள் இறங்கி வந்து, தொழ வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்பு ஜிப்ரில் (அலை) தொழ வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்பு ஜிப்ரில் (அலை) தொழ வைத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் தொழுதார்கள். பின்பு இப்படியே நீர் கட்டளையிடப்பட்டுள்ளீர் என ஜிப்ரில் (அலை) கூறியதை நீர் அறியவில்லையா? என (அபூ மஸ்ஊத்(ரலி) கூறினார்கள் என உர்வா கூறினார்””. அப்போது உமர் இப்னு அப்துல் அஜீஸ் அவர்கள், ”உர்வாவே! நீ என்ன சொல்கிறீர் என்பதை யோசித்துப் பாரும். தொழுகை நேரத்தில் நபி(ஸல்) அவர்களுக்குக் கற்றுத்தர ஜிப்ரில் (அலை) தொழ வைத்தார்களா? என்று கேட்டார். இவ்வாறே, அபூமஸ்ஊத்(ரலி) அவர்களின் மகன் பஷீர், தன் தந்தை கூறியதாக அறிவித்துள்ளார்”” என உர்வா கூறினார். ”நபி(ஸல்) அர்கள் அஸரைத் தொழ வைத்தார்கள். அப்போது சூரியன் தன் இடத்தில் அது உயர்வதற்கு (மறைவதற்கு_ முன் இருந்தது என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) என்னிடம் கூறினார்கள் எனவும் உர்வா கூறினார். இதை இப்னு ஷிஹாப் அறிவிக்கின்றார். (இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, தாரமீ ஆகிய நூற்களிலும் உள்ளது). எண் 2: ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, சுப்ஹு தொழுகையின் நேரம் பற்றிக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் கூறவில்லை. மறுநாள் காலை நேரம், பஜ்ர் (வைகறை) நேரம் ஏற்பட்டதுமே சுப்ஹுத் தொழ வைத்தார்கள். பின்பு (மறுநாள்) காலை கிழக்கு வெளுத்தப் பின் சுப்ஹைத் தொழ வைத்தார்கள். பின்பு தொழுகையின் நேரம் பற்றி கேட்டவர் எங்கே? என்று கேட்டார்கள். ”இறைத்தூதர் அவர்களே! இதோ நான் தான்”” என அவர் கூறினார். (நேற்றும் இன்றும் தொழ வைத்த) இந்த இடைப்பட்ட நேரம் தான் (சுப்ஹின்) நேரம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள். (இந்த நபிமொழியானது, அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்து, நஸயீயில் உள்ளது) எண் 3: நபி(ஸல்) அவர்கள் சுப்ஹை தொழ வைத்து விட்டால், பெண்கள் தங்களின் போர்வையால் போர்த்திக் கொண்டு (வீடு) திரும்புவார்கள். இருளின் காரணமாக அவர்கள் (யார் என்று) அறியப்பட மாட்டார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (இந்த நபிமொழியானது, புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் உள்ளது). எண் 4: சூரியன் உதயமாகும் முன் ஒருவர் சுப்ஹின் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டால் சுப்ஹையே அடைந்தவராவார். சூரியன் மறையும் முன் அஸரின் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டால் அஸரையே அடைந்தவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (இந்த நபிமொழியானது, புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீயிலும் உள்ளது). எண் 5: என்னிடம் உங்களின் காரியங்களில் மிக முக்கியமானது, தொழுகை தான். ஒருவர் அதை (தானும்) பேணி, அதன் மீது (பிறரைப்) பேணச் செய்தால் தன் மார்க்கத்தை பேணியவராவார். ஒருவர் அதை பாழாக்கினால் அவர் அது அல்லாத மற்றவைகளை ரொம்ப பாழாக்கி விடுவார் என உமர்(ரலி) அவர்கள் தன் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதினார்கள். மேலும், நிழல் ஒரு முழம் சாய்ந்து விட்டால், உங்களில் ஒருவரது நிழல் அவரைப் போன்று ஆகும் வரை அஸர் தொழுங்கள். சூரியன் மறையும்முன் ஆறு மைலோ அல்லது ஒன்பது மைலோ எளிதான பயணம் செல்பவரின் கால அளவுக்கு வெள்ளையாக சூரியன் உயர்ந்த நிலையில் அஸரையும், சூரியன் மறைந்து விட்டால் மஹ்ரிபையும், சூரியனின் மஞ்சள் நிறம் மறைந்து விட்டால், இரவின் மூன்றாவது பகுதி வரை இஷாவையும் (தொழுங்கள்). தூக்கம் வந்தால் (இஷாவை) தொழாமல் தூங்க வேண்டாம் என்று மூன்று முறை குறிப்பிட்டும், நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து தெளிவாக இருக்கும் நிலையில் சுப்ஹையும் (தொழுங்கள்) என்றும் (கடிதத்தில்) எழுதினார்கள் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களின் அடிமை நாபிஉ கூறுகின்றார்கள். (இந்த நபிமொழியை அறிவிக்கும் நாபிஉ, உமர்(ரலி) அவர்களை சந்தித்தில்லை) எண் 6: சூரியன் சாய்ந்து விட்டால் லுஹரையும், சூரியன் வெண்மையாகி, மஞ்சனிக்கும் முன் அஸரையும், சூரியன் மறைந்து விட்டால் மஹ்ரிபையும் தொழுது கொள்வீராக! தூக்கம் வரும் வரை இஷாவை பிற்படுத்திச் செய். நெருக்கமாகவும், பிகாசமாகவும் நட்சத்திரங்கள் உள்ள போது சுப்ஹைத் தொழு. குர்ஆனில் நீண்ட இரண்டு அத்தியாயங்களை, அதில் ஓது என அபூமூஸா அல் அஷ்அரி(ரலி) அவர்களுக்கு உமர்(ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள் என அபூ ஸுஹைல் தன் தந்தை கூறியதாகக் கூறுகிறார்கள். எண் 7: சூரியன் நன்கு வெண்மையாகியதும், ஒரு பயணி ஒன்பது மைல் தூரம் சாதாரண முறையில் பயணம் செய்யும் அளவு வரை அஸரைத் தொழு! (இரவின் முந்திய) உனது நேரத்திற்கும், இரவின் மூன்றாவது நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் இஷாவைத் தொழு! தாமதப்படுத்தினால் இரவின் இறுதிப் பகுதி வரை (தாமதப்படுத்திக் கொள்). ”தொழ அலுப்பாகக் கூடியவர்களில் ஒருவராகி விடாதே”” என்று அபூமூஸா அல் அஷ்அரி(ரலி) அவர்களுக்கு உமர்(ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள். இதை உர்வா கூறுகின்றார்கள். எண் 8: தொழுகையின் நேரம் பற்றி அபூஹுரைரா(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ”நான் உனக்கு அறிவிக்கிறேன். உன் நிழல் உன் போன்று ஆகி விட்டால் லுஹரையும், உனது நிழல் உன் போன்று இரண்டு மடங்காகி விட்டால் அஸரையும், சூரியன் மறைந்து விட்டால் மஹ்ரிபையும், உன(து ஆரம்ப இரவு)க்கும், இரவின் மூன்றாவது பகுதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இஷாவையும் தொழுது கொள். இரவின் கடைசி இருளின் போது சுப்ஹையும் தொழுது கொள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறியதாக உம்மு சல்மா(ரலி) அவர்களின் அடிமை அப்துல்லா இப்னு ராபீஉ என்பவர் கூறுகின்றார்கள். (இது திர்மிதீ, நஸயீயிலும் உள்ளது). எண் 9: நாங்கள் அஸர் தொழுவோம். பின்பு ஒருவர் அம்ரு இப்னு அவ்பு அவர்களின் கூட்டத்தினர் (வசிக்கும்) பக்கம் வருவார். அதுசமயம் அவர்களை அஸர் தொடுபவர்களாகக் காண்பார் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள். எண் 10: நாங்கள் அஸர் தொழுவோம். பின்பு ஒருவர், ‘குபா” என்ற பகுதிக்கு வருவார். அ(ங்குள்ள)வர்களை சூரியன் உயர்ந்த நிலையில் பெற்றுக் கொள்வார் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கின்றார்கள். (இது வேறு வார்த்தைகளால் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ யிலும் உள்ளது). எண் 11: மாலை நேரத்தில் லுஹரைத் மக்களைத் தொழுபவர்களாக நான் அடையாமல் இருந்ததில்லை என காஸிம் இப்னு முஹம்மத் கூறுகின்றார்கள். பாடம்: 2 ஜும்ஆத் தொழுகையின் நேரங்கள் எண் 12: ஜும்ஆ நாளன்று அகீல் இப்னு அபீதாலிப் உடைய ஆடைவிரிப்பை பள்ளியின் மேற்குப் புறத்து சுவற்றின் பக்கம் போடப்படுவதை நான் பார்த்துள்ளேன். அந்த ஆடை விரிப்பு முழுவதையும் சுவற்றின் நிழல் மூடி விட்டால் உமர்(ரலி) அவர்கள் (வீட்டை விட்டு) வெளியேறி வந்து, ஜும்ஆத் தொழுகை நடத்துவார்கள். பின்பு நாங்கள் ஜும்ஆத் தொழுகைக்குப் பின்பு வந்து லுஹா (பகல்) நேரத்தூக்கம் தூங்குவோம் என அபூஸுஹைல் அவர்களின் தந்தை மாலிக் கூறுகின்றார்கள். எண் 13: உதுமான்(ரலி) அவர்கள் மதீனாவில் ஜும்ஆத் தொழ வைப்பார்கள். பின்பு ‘மலல்” என்ற இடத்தில் அஸரைத் தொழ வைப்பார்கள் என இப்னு அபீ ஸலீத் என்பார் கூறுகின்றார்கள். பாடம்: 3 தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் எண் 14: தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர், அந்தத் தொழுகையையே அடைந்தவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். (இது புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ யிலும் உள்ளது). எண் 15: ருகூஉ உமக்கு கிடைக்கவில்லையானால், ஸஜ்தாவும் உமக்குக் கிடைக்காது என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள். எண் 16: ருகூஉ வை அடைந்தவர், ஸஜ்தாவை அடைந்தவராவார் என அப்துல்லா இப்னு உமர்(ரலி), ஸைது இப்னு ஸாபித்(ரலி) இருவரும் கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாகக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள். எண் 17: ருகூஉ வை அடைந்தவர், ஸஜ்தாவை (அந்த ரக்அத்தை) அடைந்தவராவார். சூரா பாத்திஹா (கேட்க) கிடைக்கவில்லையானால் அதிக நன்மை அவருக்குத் தவறி விடும் என அபூஹுரைரா(ரலி) கூறினார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள். பாடம்: 4 சூரியன் சாய்வது, இரவு சூழ்வது பற்றிய ஹதீஸ்கள் எண் 18: ‘துலூகி ஷம்சீ” என்பது, சூரியன் நன்றாக சாய்வது என்பதாகும் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள். எண் 19: சூரியன் சாய்வது என்பது, அதன் நிழல் சாய்வது என்பதாகும். இரவு சூழ்வது என்பது, இரவு சூழ்ந்து, அதன் இருள் ஏற்படுவதாகும் என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) கூறுவார்கள் என முக்பின் தனக்கு கூறியதாக தாவூத் இப்னு ஹுஸைன் என்பார் கூறுகின்றார்கள். பாடம்: 5 நேரங்களின் கட்டாயம் எண் 20: எவருக்கு அஸர் த் தொழுகை தவறி விடுகிறதோ, அவர் தனது குடும்பத்தவரையும், செல்வத்தையும் இழந்தவர் போன்றவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (இது புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் உள்ளது) எண் 21: உமர்(ரலி) அவர்கள் அஸர் தொழுது விட்டு திரும்பும் வழியில் அஸர் தொழுகையில் கலந்து கொள்ளாத ஒரு

அல் முஅத்தா நபிமொழித் தொகுப்பு Read More »

அத்தியாயம் 54 திருக்குர்ஆன் விளக்கவுரை

ஸஹீஹ் முஸ்லிம்அத்தியாயம் 54திருக்குர்ஆன் விளக்கவுரை 5738. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இஸ்ரவேலர்களிடம், “ஹித்தத்துன் (எங்களை மன்னிப்பாயாக!) என்று கூறிக் கொண்டே அதன் வாசலில் பணிவாக நுழையுங்கள். உங்களுடைய குற்றங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறப்பட்டது.ஆனால், (அவர்கள் தமக்குக் கூறப்பட்ட வார்த்தையை) மாற்றி(க்கூறி)யதோடு தம் புட்டங்களால் தவழ்ந்தபடி வாசலில் நுழைந்தார்கள். மேலும், (உள்ளே நுழையும்போது) “ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின்” (ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய வித்து) என்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.அத்தியாயம் : 545739. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பு வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து வேத அறிவிப்பு (“வஹீ”) அருளினான். அவர்கள் இறந்த நாட்களில் அருளப்பெற்ற வேதஅறிவிப்பு (மற்ற காலங்களில் அருளப்பெற்றதைவிட) அதிகமாக இருந்தது.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 545740. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:யூதர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள். அந்த வசனம் மட்டும் எங்களிடையே அருளப்பெற்றிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கியிருப்போம்” என்று கூறினர்.உமர் (ரலி) அவர்கள், “அ(ந்த வசனமான)து, எந்த இடத்தில் அருளப்பெற்றது? எந்த நாளில் அருளப்பெற்றது? அது அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அது “அரஃபா” நாளில் அருளப்பெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபா பெருவெளியில் நின்று கொண்டிருந்தார்கள்” என்று கூறினார்கள்.இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:“இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையை உங்கள்மீது நிறைவாக்கிவிட்டேன்” (5:3) எனும் இறைவசனம் அருளப்பெற்ற நாள் (சிலரது அறிவிப்பிலுள்ளதைப் போன்று) வெள்ளிக்கிழமையாக இருந்ததா, அல்லது இல்லையா என நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகிறேன்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 545741. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:யூதர்கள் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம், “இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையை உங்கள்மீது நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக்கொண்டுவிட்டேன்” (5:3) எனும் இறைவசனம் யூதர் சமுதாயமான எங்களுக்கு அருளப்பெற்றிருந்து, அது அருளப்பெற்ற தினத்தை நாங்கள் அறிந்திருந்தால், அந்நாளைப் பண்டிகை நாளாக நாங்கள் ஆக்கிக் கொண்டாடியிருப்போம்” என்று கூறினர்.அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அது அருளப்பெற்ற நாளையும் நேரத்தையும் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே இருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிந்துள்ளேன். அது “ஜம்உ” உடைய (முஸ்தலிஃபா) இரவில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “அரஃபாத்” பெருவெளியில் இருந்தபோது அருளப்பெற்றது” என்று கூறினார்கள். – இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 545742. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக்கொண்டிருக்கும் ஒரு வசனம் யூத சமுதாயமாகிய எங்களுக்கு அருளப்பெற்றிருந்தால், அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கியிருப்போம்” என்று கூறினார்.உமர் (ரலி) அவர்கள், “அது எந்த வசனம்?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், “இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையை உங்கள்மீது நிறைவாக்கிவிட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டுவிட்டேன்” (5:3) எனும் இறைவசனம்தான் (அது) என்று கூறினார்.உமர் (ரலி) அவர்கள், “அந்த வசனம் எந்த நாளில் அருளப்பெற்றது; எந்த இடத்தில் அருளப்பெற்றது என்பதையெல்லாம் நான் அறிவேன். அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அரஃபாத்” பெருவெளியில் இருந்தபோது, ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.அத்தியாயம் : 545743. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அநாதை(ப்பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாகவோ மும்மூன்றாகவோ நான்கு நான்காகவோ மணந்துகொள்ளுங்கள்” (4:3) எனும் இறைவசனத்தைப் பற்றிக்கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) விளக்கமளித்தார்கள்:என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! இந்த (வசனத்தில் கூறப்பட்டுள்ள) பெண், தன் காப்பாளரின் மடியில் (பொறுப்பில்) வளர்கின்ற அநாதைப் பெண் ஆவாள். அவரது செல்வத்தில் அவளும் பங்காளியாக இருந்துவருவாள். இந்நிலையில் அவளது செல்வத்தாலும் அழகாலும் கவரப்பட்டு, அவளுடைய காப்பாளர் (மணக்கொடை) விஷயத்தில் நியாயமான முறையில் நடக்காமல், மற்றவர்கள் அவளுக்கு அளிப்பதைப் போன்ற மணக்கொடையை (மஹ்ரை) அளிக்காமல் அவளை மண முடித்துக்கொள்ள விரும்புவார்.இவ்விதம் காப்பாளர்கள் (தம் பொறுப்பிலிருக்கும்) அநாதைப் பெண்களுக்கு நீதி செலுத்தாமல், அவர்களைப் போன்ற பெண்களுக்குக் கொடுக்கப்படும் மணக்கொடையில் மிக உயர்ந்த மணக்கொடை எதுவோ அதை அவர்களுக்கு அளிக்காமல், அவர்களை மணமுடித்துக் கொள்ள அவர்களுக்கு (இந்த இறைவசனத்தின் வாயிலாக)த் தடை விதிக்கப்பட்டது. அந்தப் பெண்களை விடுத்து, மற்றப் பெண்களில் தமக்கு விருப்பமான பெண்களை (நான்கு பேர்வரை) மணமுடித்துக்கொள்ளுமாறு கட்டளையிடப்பட்டது.இந்த இறைவசனம் அருளப்பெற்ற பின்பும் மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்கேட்டு வரலாயினர். ஆகவே அல்லாஹ், “(நபியே!) பெண்கள் தொடர்பாக அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். நீர் கூறுவீராக: அவர்கள் குறித்து அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றான். மேலும், அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை அவர்களுக்கு நீங்கள் வழங்காமலேயே அவர்களை நீங்கள் மணந்து கொள்ள விரும்புவது பற்றியும், பலவீனமான சிறுவர்கள் பற்றியும் (இவ்)வேதத்தில் உங்களுக்கு ஓதிக்காட்டப் படுகின்ற வசனமும் (உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றது)” (4:127) எனும் இறைவசனத்தை அருளினான்.“இவ்வேதத்தில் (ஏற்கெனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது” என்பது, (இந்த அத்தியாயத்தில்) இறைவன் குறிப்பிட்ட “அநாதை(ப் பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால், உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ மணந்துகொள்ளுங்கள்” (4:3) எனும் இறை வசனத்தையே குறிக்கிறது.“அவர்களை நீங்கள் மணந்துகொள்ள விரும்புவது பற்றியும்” (4:127) எனும் பிந்திய இறை வசனத்தொடர், உங்களில் (காப்பாளராயிருக்கும்) ஒருவர் தமது (பராமரிப்பில் இருந்துவரும் அநாதைப் பெண்ணை, அவள் செல்வமும் அழகும் குறைந்தவளாக இருக்கும்போது, அவளை (மணந்துகொள்ள) விரும்பாமலிருப்பதைக் குறிக்கும்.அப்பெண்களை மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால், அவர்கள் எந்த அநாதைப் பெண்களின் செல்வத்துக்கும் அழகுக்கும் ஆசைப்பட்டார்களோ அந்தப் பெண்களையும் நேர்மையான முறையிலேயே அல்லாமல் வேறு எந்த வகையிலும் மணமுடித்துக் கொள்ளலாகாது என்று அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.– மேற்கண்ட ஹதீஸ் உர்வா பின் அஸ் ஸுபைர் (ரஹ்) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அவற்றில், “நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “அநாதை(ப் பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால்…” (4:3) எனும் இறை வசனத்தைப் பற்றிக் கேட்டேன்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விளக்கங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.ஹதீஸின் இறுதியில், (“அப்பெண்களை மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால்” என்பதற்கு முன்னால், “அப்பெண்கள் செல்வத்திலும் அழகிலும் குறைந்தவர்களாக இருக்கும்போது, அவர்களை (மணந்துகொள்ள காப்பாளர்கள் விரும்பாமலிருந்த காரணத்தால்)” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.அத்தியாயம் : 545744. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:“அநாதை(ப் பெண்களிடம் நேர்மையாக நடக்க இயலாது என நீங்கள் அஞ்சினால்…” (4:3) எனும் வசனம் தொடர்பாக ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:இந்த வசனம், தம்மிடமுள்ள செல்வமுடைய அநாதைப் பெண்ணுக்குத் தாமே காப்பாளராகவும் வாரிசாகவும் இருந்துவரும் மனிதர் தொடர்பாக அருளப்பெற்றது. அவளுக்காக வாதாட அவளைத் தவிர வேறெவரும் இல்லை எனும் நிலையில் அவள் இருப்பாள்.அவளது செல்வத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவளை அவர் மணமுடித்துக் கொடுக்காமலிருப்பார். இதன் மூலம் அவளுக்கு அவர் இன்னல் ஏற்படுத்தி, உறவையும் கெடுத்துவைத்திருப்பார்.ஆகவேதான், அநாதைப் பெண்(களை மணந்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நேர்மையாக நடக்கமாட்டீர்கள் என்று நீங்கள் அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த (அதாவது உங்களுக்கு நான் அனுமதித்துள்ள) பெண்களை மணந்துகொள்ளுங்கள். நீங்கள் இன்னல் விளைவிக்கும் இந்த அநாதைப் பெண்களை விட்டுவிடுங்கள் என்று அல்லாஹ் கூறினான்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 545745. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:“அநாதைப் பெண்களுக்கு நிர்ணயிக்கப்பட்டதை அவர்களுக்கு நீங்கள் வழங்காமலேயே அவர்களை நீங்கள் மணந்துகொள்ள விரும்புவது பற்றியும், பலவீனமான சிறுவர்கள் பற்றியும் (இவ்)வேதத்தில் உங்களுக்கு ஓதிக்காட்டப்படுகின்ற வசனமும் (உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றது)” (4:127) எனும் இறைவசனம் ஓர் அநாதைப் பெண் தொடர்பாக அருளப்பெற்றது.அவள் ஒரு மனிதரின் பொறுப்பில், அவரது சொத்தில் பங்காளியாக இருந்துவருவாள். அவளை(த் தாமே மணந்துகொள்ள விரும்பினாலும், அவர் முறையாக இல்லறம் நடத்தமாட்டார். அல்லது) தாமும் மணந்துகொள்ள விரும்பமாட்டார். பிறருக்கு அவளை மணமுடித்துக் கொடுத்து தமது சொத்தில் பிறர் பங்காளியாவதையும் விரும்பமாட்டார். எனவே, அவளை(தாமும் மணக்காமலும் யாருக்கும் மணமுடித்துக் கொடுக்காமலும்) முடக்கிவைத்திருப்பார். (இத்தகைய நிலையை இறைவன் தடை செய்தான்.)அத்தியாயம் : 545746. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:ஆயிஷா (ரலி) அவர்கள், “(நபியே!) பெண்கள் தொடர்பாக அவர்கள் உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர்…” (4:127)எனும் இறைவசனத்துக்கு விளக்கமளிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்:இந்த வசனம் ஓர் அநாதைப் பெண்ணைப் பற்றியதாகும். அவள் ஒரு மனிதரின் பொறுப்பில் இருந்துவருவாள். அவள் அவருடைய பேரீச்சமரங்கள் உள்ளிட்ட செல்வங்களில் பங்காளியாகக் கூட இருக்கக்கூடும். இந்நிலையில் அவளை அவரே மணமுடித்துக்கொள்ள விரும்புவார்.- மேலும், அவளை வேறோர் ஆணுக்கு மணமுடித்துக் கொடுத்து அவ(ளுக்குக் கணவனாக வருகின்றவ)னும் தமது சொத்தில் பங்காளியாக மாறுவதை அவர் வெறுப்பார். எனவே, (எவரையும் மணக்க விடாமல்) அவளை அக்காப்பாளர் முடக்கி வைத்துவந்தார். (அப்போது தான் மேற்கண்ட வசனம் அருளப்பெற்றது.)அத்தியாயம் : 545747. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:ஆயிஷா (ரலி) அவர்கள், “ஏழையாக இருப்பவர் நியாயமாக உண்ணட்டும்” (4:6) எனும் இறை வசனத்துக்குப் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்:இந்த வசனம் அநாதைகளை நிர்வகித்து, அவர்களின் செல்வத்தைப் பராமரிக்கும் காப்பாளர்கள் தொடர்பாக அருளப்பெற்றது. அவர் ஏழையாக இருந்தால், (தமது உழைப்புக்கான கூலியாக நியாயமான முறையில்) அநாதைகளின் பொருளை அனுபவிக்கலாம்.அத்தியாயம் : 545748. உர்வா பின் அஸ்ஸுபைர்

அத்தியாயம் 54 திருக்குர்ஆன் விளக்கவுரை Read More »

ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம் ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பாசிரியர் (அரபி மூலம்) : இமாம் அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்)

Read More »

அத்தியாயம் 53 உலக ஆசை இல்லாமல் இருப்பதும், எளிமையாக இருப்பதும்

ஸஹீஹ் முஸ்லிம்அத்தியாயம் 53உலக ஆசை இல்லாமல் இருப்பதும், எளிமையாக இருப்பதும் பாடம் : 1 உலகப் பற்றின்மையும் தத்துவங்களும்.5663. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அத்தியாயம் : 535664. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள) “ஆலியா”வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் (சிறிய) காதைப் பிடித்துக்கொண்டு, “உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?” என்று கேட்டார்கள்.அதற்கு மக்கள், “எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?” என்று கேட்டார்கள்.மக்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும் போது எப்படி (இதற்கு மதிப்பிருக்கும்)?” என்று கேட்டனர்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின், அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்” என்று சொன்னார்கள்.– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அவற்றில், அப்துல் வஹ்ஹாப் அஸ் ஸகஃபீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “இந்த ஆடு உயிருடனிருந்தால்கூட அதன் காதுகள் சிறுத்திருப்பதன் காரணமாகக் குறையுள்ளதாகவே இருக்கும்” என்று மக்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.அத்தியாயம் : 535665. அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள், “மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பிவிட்டது” என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன்.அப்போது அவர்கள், “ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்” என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து மிச்சப்படுத்தியதையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?” என்று கேட்டார்கள்.– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் அஷ்ஷிக்கீர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அவற்றில் “நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.அத்தியாயம் : 535666. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அடியான், “என் செல்வம்; என் செல்வம்” என்று கூறுகின்றான். அவனுடைய செல்வங்களில் மூன்று மட்டுமே அவனுக்குரியவையாகும். அவன் உண்டு கழித்ததும், அல்லது உடுத்திக் கிழித்ததும், அல்லது கொடுத்துச் சேமித்துக்கொண்டதும்தான் அவனுக்கு உரியவை. மற்றவை அனைத்தும் கைவிட்டுப் போகக்கூடியவையும், மக்களுக்காக அவன் விட்டுச்செல்லக் கூடியவையும் ஆகும்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.அத்தியாயம் : 535667. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்கள் கூறினார்கள்:இறந்துபோனவரைப் பின்தொடர்ந்து மூன்று பொருட்கள் செல்கின்றன. அவற்றில் இரண்டு திரும்பிவிடுகின்றன; ஒன்று மட்டுமே அவருடன் தங்கிவிடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பிவிடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடுகின்றன.இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 535668. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:பனூ ஆமிர் பின் லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பத்ருப்போரில் கலந்துகொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை, “ஜிஸ்யா” (காப்பு)வரி வசூலித்துக் கொண்டுவரும்படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களாயிருந்த) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்திருந்தார்கள்.அபூஉபைதா (ரலி) அவர்கள் (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூஉபைதா (ரலி) அவர்கள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியாக ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள்.தொழுகை முடிந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தம் எண்ணத்தைச் சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்து விட்டு, “அபூஉபைதா சிறிது நிதியுடன் பஹ்ரைனிலிருந்து வந்துவிட்டார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்றார்கள்.அதற்கு அன்சாரிகள், “ஆம்; அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். “அவ்வாறாயின், ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை.ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச்செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, (மறுமையின் எண்ணத்திலிருந்து திருப்பி) அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அ(ந்த உலகாசையான)து அழித்துவிடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்கள்.– மேற்கண்ட ஹதீஸ் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அவற்றில், சாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், (“அவர்களை அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அழித்துவிடுமோ” என்பதற்குப் பகரமாக) “அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் திருப்பி விடுமோ” என்று இடம்பெற்றுள்ளது.அத்தியாயம் : 535669. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “பாரசீகர்களும் ரோமர்களும் உங்களால் வெற்றி கொள்ளப்படும்போது, நீங்கள் எத்தகைய மக்களாய் இருப்பீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், “அல்லாஹ் எங்களுக்கு என்ன கட்டளையிட்டுள்ளானோ (அதன்படியே நடந்துகொள்வோம்) அதன்படியே கூறுவோம் (அதாவது நன்றி கூறி அவனைப் போற்றுவோம்)” என்று விடையளித்தார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேறொன்றும் செய்யமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். பின்னர் “நீங்கள் ஒருவருக்கொருவர் (சுயநலத்துடன்) போட்டி போட்டுக் கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் பொறாமை கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொள்வீர்கள். பின்னர் ஒருவருக்கொருவர் குரோதம் கொள்வீர்கள். அல்லது இவற்றைப் போன்றதைச் செய்வீர்கள்” என்று கூறிவிட்டு, “பிறகு ஏழை முஹாஜிர்களை நோக்கிச் சென்று, அவர்களில் சிலருக்குச் சிலர்மீது அதிகாரத்தை வழங்குவீர்கள்” என்று கூறினார்கள்.அத்தியாயம் : 535670. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மைவிட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே அவற்றில் தம்மைவிடக் கீழிருப்பவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும்!இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.அத்தியாயம் : 535671. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களுக்குக் கீழிருப்பவர்களைப் பாருங்கள். உங்களைவிட மேலிருப்பவர்களைப் பார்க்காதீர்கள். அதுவே அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நீங்கள் குறைத்து மதிப்பிடாமலிருக்க மிகவும் ஏற்றதாகும்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.அவற்றில் அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உங்களுக்கு அல்லாஹ் புரிந்திருக்கும்” என்று இடம்பெற்றுள்ளது.அத்தியாயம் : 535672. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:பனூ இஸ்ராயீல் மக்களில் மூன்று பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் தொழு நோயாளியாகவும் மற்றொருவர் வழுக்கைத் தலையராகவும் இன்னொருவர் குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அம்மூவரையும் சோதிக்க நாடினான்;எனவே, வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.அந்த வானவர் தொழுநோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், “நல்ல நிறம்,நல்ல தோல்(தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் என்னை அருவருப்பாகக் கருதக் காரணமான இ(ந்த நோயான)து என்னைவிட்டு விலக வேண்டும்” என்று சொன்னார்.உடனே அவ்வானவர் (இறைநாட்டப்படி) அவரைத் தம் கைகளால் தடவ அந்த அருவருப்பான நோய் அவரைவிட்டு விலகியது. மேலும், அவருக்கு நல்ல நிறமும் நல்ல தோலும் வழங்கப்பட்டன. பிறகு அவ்வானவர், “செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க, அவர், “ஒட்டகம்தான்” என்றோ அல்லது “பசு மாடுதான்” என்றோ பதிலளித்தார்.-தொழுநோயாளி மற்றும் வழுக்கைத் தலையர் ஆகிய இருவரில் ஒருவர் ஒட்டகம் என்றோ பசுமாடு என்றோ கூறினார் என இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.-ஆகவே, பத்து மாத சினையுள்ள ஒட்டகம் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வானவர், “இதில் உனக்கு இறைவன் வளம் (பரக்கத்) வழங்குவானாக!” என்று பிரார்த்தித்தார்.அடுத்து அந்த வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்று, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர் அழகான முடிதான். மக்கள் வெறுக்கும் இந்த வழுக்கை என்னைவிட்டு நீங்க வேண்டும்” என்றார்.உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவினார்; வழுக்கை மறைந்தது; அழகிய முடியைப் பெற்றார். அவ்வானவர், “செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “பசுமாடுதான் (எனக்கு மிகவும் விருப்பமான செல்வம்)” என்று சொன்னார். உடனே அவ்வானவர் அந்த வழுக்கைத் தலையருக்குச் சினையுற்ற பசுமாடு ஒன்றைக் கொடுத்து, “அல்லாஹ் உமக்கு இதில் வளம் (பரக்கத்) புரிவானாக” என்று பிரார்த்தித்தார்.பிறகு அந்த வானவர் குருடரிடம் சென்று, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க, அவர் “அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும், அதன் மூலம் மக்களை நான் பார்ப்பதும்தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். உடனே அவ்வானவர் அவரைத் தமது கரத்தால் தடவ, அவருக்கு அல்லாஹ் அவரது பார்வையைத் திருப்பித் தந்தான்.பிறகு அவ்வானவர், “செல்வங்களில் உமக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர் “ஆடு” என்றார். அவருக்கு அவ்வானவர், சினையுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். (ஒட்டகமும் மாடும் வழங்கப்பெற்ற) இருவரும் நிறைய குட்டிகள் ஈந்திடப்பெற்றனர்.

அத்தியாயம் 53 உலக ஆசை இல்லாமல் இருப்பதும், எளிமையாக இருப்பதும் Read More »

அத்தியாயம் 52 குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும்

ஸஹீஹ் முஸ்லிம்அத்தியாயம் 52குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும் பாடம் : 1 குழப்பங்கள் நெருங்கிவிட்டதும், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச்சுவர் திறந்துவிட்டதும்.5520. ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் (திடுக்கிட்டுத்) தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடுதான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.-அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் (“இந்த அளவுக்கு” என்று கூறியபோது) தம் கைவிரல்களால் (அரபி எண் வடிவில்) 10 என்று மடித்துக் காட்டினார்கள்.-அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதா நமக்கு அழிவு ஏற்படும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்; தீமை பெருத்து விட்டால்” என்று பதிலளித்தார்கள்.– மேற்கண்ட ஹதீஸ் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அத்தியாயம் : 525521. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் முகம் சிவந்த நிலையில் பதற்றத்துடன் “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணமாக அரபியருக்குக் கேடு தான். இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப் பட்டுள்ளது” என்று கூறியபடி வெளியேறினார்கள்.(“இந்த அளவுக்கு” என்று கூறியபோது) பெருவிரலையும் அதற்கு அடுத்துள்ள (சுட்டு) விரலையும் வளையமிட்டுக் காட்டினார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நல்லவர்கள் நம்மிடையே இருக்கும்போதுமா நமக்கு அழிவு ஏற்படும்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம்; தீமை பெருத்துவிட்டால்” என்று பதிலளித்தார்கள்.– மேற்கண்ட ஹதீஸ் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அத்தியாயம் : 525522. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள், “இன்று யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடுப்புச் சுவரிலிருந்து இந்த அளவுக்குத் திறக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள்.இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான உஹைப் பின் காலித் (ரஹ்) அவர்கள், (“இந்த அளவுக்கு” என்று கூறியபோது) தம் விரல்களால் (அரபி எண் வடிவில்) 90 என்று மடித்துக் காட்டினார்கள்.அத்தியாயம் : 52பாடம் : 2 இறையில்லம் கஅபாவை நாடிவரும் படையினர் பூமிக்குள் புதைந்துபோவது பற்றிய முன்னறிவிப்பு.5523. உபைதுல்லாஹ் இப்னு கிப்திய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:ஹாரிஸ் பின் அபீரபீஆ மற்றும் அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) ஆகியோர் இறைநம்பிக்கையாளர்களின் அன்னை உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்றனர். அப்போது அவ்விருவருடன் நானும் இருந்தேன். அவர்கள் இருவரும் உம்மு சலமா (ரலி) அவர்களிடம், பூமிக்குள் புதைந்துபோகும் படையினரைப் பற்றிக் கேட்டார்கள். -இது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களின் காலத்தில் நடைபெற்றது.-அதற்கு உம்மு சலமா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் இறையில்லம் கஅபா (எல்லை)க்குள் அபயம் தேடி வருவார். அவரை நோக்கிப் படையொன்று அனுப்பப்படும். அப்படையினர் ஒரு சமவெளியில் இருக்கும்போது, பூமிக்குள் புதைந்துபோய் விடுவார்கள்” என்று சொன்னார்கள்.உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! நிர்பந்தமாகப் புறப்பட்டு வந்தவரின் நிலை என்ன?” என்று கேட்டேன். “அவர்களுடன் சேர்த்து அவரும் புதைந்துபோவார். எனினும், மறுமை நாளில் அவரது எண்ணத்திற்கேற்ப அவர் எழுப்பப்படுவார்” என்று கூறினார்கள் என்றார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஜஅஃபர் (ரஹ்) அவர்கள், “(“சமவெளி” என்பது) மதீனாவிலுள்ள சமவெளி (பைதாஉல் மதீனா) ஆகும்” என்று கூறினார்கள்.அத்தியாயம் : 525524. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.அதில் அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள், “நான் அபூஜஅஃபர் (ரஹ்) அவர்களைச் சந்தித்தபோது, “பூமியில் ஒரு சமவெளியில் என்றே உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்றேன். அதற்கு அபூஜஅஃபர் (ரஹ்) அவர்கள், “அவ்வாறில்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அது மதீனாவிலுள்ள பைதா(சமவெளி) ஆகும்” என்று கூறினார்கள்” என்றார்கள்.அத்தியாயம் : 525525. ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறிய தாவது:நபி (ஸல்) அவர்கள், “இந்த இறையில்லத்தின் மீது போர் தொடுக்க எண்ணி ஒரு படையினர் நிச்சயமாக வருவார்கள். அவர்கள் பூமியில் ஒரு சமவெளியில் இருக்கும்போது, நடுவிலுள்ள அணியினர் பூமிக்குள் புதைந்து போவார்கள். முன்னாலுள்ள அணியினர் பின்னாலிருக்கும் அணியினரை அழைப்பார்கள். பிறகு அவர்களும் பூமிக்குள் புதைந்து போவார்கள். இறுதியில் அங்கிருந்து தப்பித்து வந்து, அவர்களைப் பற்றிய செய்தி அறிவிப்பவர் மட்டுமே எஞ்சியிருப்பார்.(இதை அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் அறிவித்தபோது,) ஒரு மனிதர், “நீர் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் மீது பொய்யுரைக்கவில்லை என நான் சாட்சியம் கூறுகிறேன். மேலும், ஹஃப்ஸா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மீது பொய்யுரைக்கவில்லை என்றும் நான் சாட்சியமளிக்கிறேன்” என்றார்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 525526. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இந்த இல்லத்தை -அதாவது கஅபாவை- நோக்கி அபயம் தேடி ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்களிடம் ஆதரவுப் படையினரோ ஆட்பலமோ முன்னேற்பாடோ இருக்காது. (அவர்களைத் தாக்குவதற்காக) படை ஒன்று அவர்களிடம் அனுப்பப்படும். அப்படையினர் ஒரு சமவெளியில் இருக்கும்போது அவர்கள் பூமிக்குள் புதைந்து போய்விடுவார்கள்.இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான யூசுஃப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:(இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் ஸஃப் வான் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்த போது) நான், “ஷாம் (சிரியா)வாசிகள் அன்றைய நாளில் மக்கா நோக்கிப் பயணம் மேற்கொள்வார்கள்” என்று சொன்னேன். அதற்கு அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள், “அறிந்துகொள்ளுங்கள்! அது (பூமிக்குள் புதைந்துபோகும்) இந்தப் படையல்ல” என்று சொன்னார்கள்.இந்த ஹதீஸ் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸைத் பின் அபீஉனைசா (ரஹ்) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது. ஆயினும், அதில் அப்துல்லாஹ் பின் ஸஃப்வான் (ரஹ்) அவர்கள் கூறிய படையினர் பற்றிய குறிப்பு இல்லை.அத்தியாயம் : 525527. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் உறங்கும்போது ஏதோ செய்துகொண்டிருந்தீர்கள். இவ்வாறு நீங்கள் எப்போதும் செய்வதில்லையே!” என்று கேட்டோம். அதற்கு, “ஓர் ஆச்சரியமான செய்தி(யினால் நான் அவ்வாறு செய்து கொண்டிருந்தேன்).என் சமுதாயத்தாரில் சிலர், இறையில்லம் கஅபாவில் தஞ்சம் புகுந்துள்ள குறைஷியரில் ஒருவருக்காக இறையில்லத்தை நோக்கி (படையெடுத்து) வருவார்கள். அவர்கள் (“பைதா எனும்) சமவெளியில் இருக்கும்போது பூமிக்குள் புதைந்துபோவார்கள்” என்று கூறினார்கள்.நாங்கள், “அல்லாஹ்வின் தூதரே! சாலையில் பல்வேறு மக்களும் திரண்டிருப்பார்களே (அவர்கள் அனைவரும் புதைந்துபோவார்களே)?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; அவர்களில் பார்வையாளர்கள், நிர்பந்தமாக அழைத்து வரப்பட்டவர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோரும் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அழிந்துபோவார்கள். பிறகு பல்வேறு நிலைப்பாடு கொண்டவர்களாய் அவர்கள் எழுப்பப்படுவார்கள். அவர்களின் எண்ணங்களுக்கேற்ப அவர்களை அல்லாஹ் (மறுமை நாளில்) எழுப்புவான்” என்று சொன்னார்கள்.அத்தியாயம் : 52பாடம் : 3 மழைத் துளிகள் விழுவதைப் போன்று குழப்பங்கள் (தொடர்ந்து) நிகழும் என்பது பற்றிய முன்னறிவிப்பு.5528. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் மதீனாவின் கோட்டைகளில் ஒன்றின் மீது ஏறிக்கொண்டு (நோட்டமிட்டபடி), “நான் பார்க்கின்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்களா? நான் மழைத்துளிகள் விழுவதைப் போன்று உங்கள் வீடுகள் நெடுகிலும் குழப்பங்கள் நிகழப்போவதைப் பார்க்கிறேன்” என்று சொன்னார்கள்.இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.– மேற்கண்ட ஹதீஸ் உசாமா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.அத்தியாயம் : 525529. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அவற்றுக்கிடையே (மௌனமாகி) அமர்ந்திருப்பவர், (அவற்றுக்காக) எழுந்து நிற்பவரை விடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவர், நடப்பவரை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவர், (அவற்றை நோக்கி) ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார்.அவற்றில் யார் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறாரோ அவரை அழிக்க அவை முற்படும். அப்போது யார் ஒரு புகலிடத்தைப் பெறுகிறாரோ, அவர் அதன் மூலம் தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 525530. மேற்கண்ட ஹதீஸ் நவ்ஃபல் பின் முஆவியா பின் உர்வா (ரலி) அவர்கள் வாயிலாக மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.அவற்றில் அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தொழுகைகளில் ஒன்று (அஸ்ர்) உள்ளது. அதைத் தவறவிட்டவர் தம் குடும்பத்தாரையும் சொத்துக்களையும் விட்டுத் தனிமைப்படுத்தப்பட்டதைப் போன்றவர் ஆவார்” என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளன.அத்தியாயம் : 525531. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:சில குழப்பங்கள் தோன்றும். அப்போது படுத்து உறங்கிக்கொண்டிருப்பவர் விழித்திருப்பவரை விடவும், விழித்திருப்பவர் (அவற்றுக்காக) எழுந்து நடப்பவரைவிடவும், அவற்றுக்காக எழுந்து நடப்பவர் (அவற்றுக்காக) எழுந்து ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார். அப்போது யார் ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ பெறுகின்றாரோ அவர் (அதன் மூலம்) தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்!இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அத்தியாயம் : 525532. உஸ்மான் அஷ்ஷஹ்ஹாம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நானும் ஃபர்கத் அஸ்ஸபகீ (ரஹ்) அவர்களும் முஸ்லிம் பின் அபீபக்ரா (ரஹ்) அவர்களிடம் அவர்களது வசிப்பிடத்திற்குச் சென்றோம். அவர்களிடம் நாங்கள் சென்றடைந்து, “குழப்பங்கள் தொடர்பாக தாங்கள் தங்கள் தந்தை (அபூபக்ரா-ரலி) அறிவித்த ஹதீஸ் எதையேனும் செவியுற்றீர்களா?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: “ஆம்” (என் தந்தை) அபூபக்ரா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதைக் கேட்டேன்:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “விரைவில் குழப்பங்கள் சில தோன்றும். அறிந்து கொள்ளுங்கள். பின்னர் ஒரு குழப்பம் தோன்றும். அதற்கிடையே உட்கார்ந்து கொண்டிருப்பவர் (அதற்காக) எழுந்து நடப்பவரை விடவும், அதற்காக எழுந்து நடப்பவர் அதை நோக்கி ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார். கவனத்தில் கொள்ளுங்கள்: அந்தக் குழப்பம் நிகழ்ந்துவிட்டால் தம்மிடம் ஒட்டகங்கள் வைத்திருப்பவர், அவற்றிடம் சென்றடையட்டும். தம்மிடம் ஆடுகள் வைத்திருப்பவர், அவற்றிடம் சென்றடையட்டும். தம்மிடம் நிலம் வைத்திருப்பவர் தமது நிலத்திற்குச் சென்றுவிடட்டும்” என்று கூறினார்கள்.அப்போது ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! தம்மிடம் ஒட்டகமோ ஆடோ நிலமோ இல்லாதவர் என்ன செய்யவேண்டும் எனக்

அத்தியாயம் 52 குழப்பங்களும், மறுமை நாளின் அடையாளங்களும் Read More »

அத்தியாயம் 51 மறுமை சுவர்க்கம் நரகம்

ஸஹீஹ் முஸ்லிம்அத்தியாயம் 51மறுமை சுவர்க்கம் நரகம் பாடம் : 1 சொர்க்கமும் அதிலுள்ள இன்பங்களின் தன்மையும் சொர்க்கவாசிகளின் நிலையும்.5436. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது. மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது.இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.அத்தியாயம் : 515437. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) நான் தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான்.இதன் அறிவிப்பாளரான அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:இதைக் குர்ஆனிலுள்ள “அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்” (32:17) எனும் வசனம் உறுதிப்படுத்துகிறது.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 515438. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்” என்று கூறினான். எனினும், (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துள்ளது சொற்பமே! – இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அத்தியாயம் : 515439. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “நான் என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்களை (சொர்க்கத்தில்) தயார்படுத்தி வைத்துள்ளேன்”என்று கூறினான். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அல்லாஹ் அறிவித்திருப்பது சொற்பமே!இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் பிறகு, “அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்துவைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்” (32:17) எனும் வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 515440. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஓர் அவையில் இருந்தேன். அப்போது அவர்கள் சொர்க்கத்தின் நிலை குறித்து பேசினார்கள்” என்று முழுமையாக ஹதீஸை அறிவித்தார்கள்.பிறகு இறுதியில் “அதில் எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் உள்ளத்திலும் தோன்றியிராத இன்பங்கள் உள்ளன” என்றும் கூறிவிட்டு, “அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் தம் இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப் புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்; நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாக அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்குளிர்ச்சியை எவரும் அறியமாட்டார்” (32:16,17) எனும் வசனங்களை ஓதினார்கள். – இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளதுஅத்தியாயம் : 51பாடம் : 2 சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது.5441. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் ஒரு பயணி நூறு வருடங்கள் பயணிப்பார்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அத்தியாயம் : 515442. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.அதில், “நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்லமாட்டார்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.அத்தியாயம் : 515443. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது.இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.– மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:நான் இந்த ஹதீஸை நுஅமான் பின் அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:“சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்துசெல்லும் கட்டான உடலுள்ள பயிற்சியளிக்கப்பட்ட உயர்ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக்கடக்க முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்” என்றார்கள்.அத்தியாயம் : 51பாடம் : 3 சொர்க்கவாசிகள்மீது இறைவன் தனது உவப்பை அருள்வதும் அதன் பின்னர் ஒருபோதும் அவர்கள்மீது கோபப்படாமல் இருப்பதும்.5444. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி, “சொர்க்கவாசிகளே!” என்று அழைப்பான். அதற்கு அவர்கள், “எங்கள் அதிபதியே! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம். நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளன” என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ், “திருப்தி அடைந்தீர்களா?” என்று கேட்பான். அதற்கு சொர்க்கவாசிகள், “உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (கொடைகள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியிருக்க, நாங்கள் திருப்தியடையாமல் இருப்போமா?” என்று கூறுவார்கள்.அப்போது அல்லாஹ், “இதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கட்டுமா?” என்பான். அவர்கள், “அதிபதியே! இதை விடச் சிறந்தது எது?” என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ், “உங்கள்மீது என் உவப்பை அருள்கிறேன்; இனி ஒருபோதும் உங்கள்மீது நான் கோபப்படமாட்டேன்” என்று கூறுவான்.இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 51பாடம் : 4 சொர்க்கவாசி(களில் கீழ்த் தட்டில் இருப்பவர்)கள் (மேல்)அறைகளில் உள்ளவர்களை வானிலுள்ள நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பது.5445. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:சொர்க்கவாசி(களில் கீழ்த் தட்டில் இருப்பவர்)கள் மேல்அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பார்கள்.இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.– (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளரான) அபூஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:நான் இந்த ஹதீஸை நுஅமான் பின் அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள், (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு) “கிழக்கு அடிவானில், அல்லது மேற்கு அடிவானில் நீங்கள் ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று” என்று (கூடுதலாக) அறிவித்ததை நான் கேட்டேன்.– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.அத்தியாயம் : 515446. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சொர்க்கவாசிகள் தமக்கு மேலேயுள்ள (சிறப்பு) அறைகளில் வசிப்பவர்களை,அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கிற ஒளிரும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (தகுதியில்) தமக்கும் அவர்களுக்குமிடையே ஏற்றத்தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டுதான்) அப்படிப் பார்ப்பார்கள்” என்று கூறினார்கள்.(இதைக் கேட்ட) நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை நபிமார்களின் தங்குமிடங்கள் தானே? மற்றவர்கள் அவற்றை அடைய முடியாதுதானே?” என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இல்லை. என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என (முறையாக) ஏற்றுக்கொண்ட மக்களே ஆவர்” என்று பதிலளித்தார்கள்.- இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 51பாடம் : 5 நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும் தியாகம் செய்ய விரும்புவோர் பற்றிய குறிப்பு.5447. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:என் சமுதாயத்தாரில் என்னை ஆழமாக நேசிப்போரில் சிலர் எனக்குப்பின் தோன்றுவார்கள். அவர்களில் ஒருவர் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும்கூடத் தியாகம் செய்ய விரும்புவார்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அத்தியாயம் : 51பாடம் : 6 சொர்க்கத்திலுள்ள சந்தையும் அதில் சொர்க்கவாசிகள் அடைந்துகொள்ளும் அருட்கொடையும் அலங்காரமும்.5448. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப்போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், “எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர்.இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அத்தியாயம் : 51பாடம் : 7 சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினரின் முகம் பௌர்ணமி இரவின் முழு நிலவைப் போன்றிருக்கும் என்பதும்,அவர்களின் இதர தன்மைகளும், அவர்களின் துணைவியர் பற்றிய குறிப்பும்.5449. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) மக்கள், “சொர்க்கத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் ஆண்களா, அல்லது பெண்களா?” என்று பெருமையுடன் பேசிக்கொண்டிருந்தனர்; அல்லது விவாதித்துக் கொண்டிருந்தனர்.அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அபுல்காசிம் (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில் நுழைகின்ற முதல் அணியினர்,பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். அவர்களுக்குப் பின்னே நுழைபவர்கள்,வானில் பேரொளி வீசும் நட்சத்திரத்தைப் போன்றிருப்பார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் இரு துணைவியர் இருப்பர். அப்பெண்களின் காலின் எலும்பு மஜ்ஜை அவர்களது (கால்) சதைக்கு அப்பாலிருந்து (அவர்களது பேரழகின் காரணத்தால்) வெளியே தெரியும். சொர்க்கத்தில் துணைவி இல்லாத எவரும் இருக்கமாட்டார்” என்று கூறவில்லையா?” எனக் கேட்டார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.– மேற்கண்ட ஹதீஸ் முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.அதில், “(ஒரு முறை) ஆண்களும் பெண்களும் “சொர்க்கத்தில் அதிக எண்ணிக்கையில் யார் இருப்பார்கள்” என்று வழக்காடிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் (அதைப் பற்றிக்) கேட்டார்கள். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அபுல்காசிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்று அறிவித்தார்கள்” என்று காணப்படுகிறது.அத்தியாயம் : 515450. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ஒளிரும் சந்திரனைப் போன்று (அழகாகத்) தோற்றமளிப்பார்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து நுழைபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று காட்சியளிப்பார்கள். சொர்க்கத்தில் அவர்கள் மலஜலம் கழிக்கமாட்டார்கள். மூக்குச் சிந்தவுமாட்டார்கள். எச்சில் துப்பவுமாட்டார்கள்.அவர்களின் சீப்புகள் தங்கத்தாலானவை. அவர்களது வியர்வையில் கஸ்தூரி மணம் கமழும். அவர்களுடைய (நறுமணப் புகையிடும்) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப்படும்.

அத்தியாயம் 51 மறுமை சுவர்க்கம் நரகம் Read More »

அத்தியாயம் 50 நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும்

ஸஹீஹ் முஸ்லிம்அத்தியாயம் 50நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும் 5353. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அப்பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் தம் நண்பர்களிடம், “அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்யாதீர்கள். அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்” என்றும், “நாம் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால், (எம்முடைய இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்” என்றும் சொன்னான்.நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, அ(வர் சொன்ன)தை அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் உபையிடம் ஆளனுப்பினார்கள். (அவர் வந்தவுடன்) அவரிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தாம் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தார்.அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார்” என்று (என்னைப் பற்றிக்) கூறினார். (அவருடன் சேர்ந்து) மக்களில் சிலரும் அப்படிச் சொன்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான வேதனை) ஏற்பட்டது. அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில் “(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது…” (63:1) என்று தொடங்கும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தமது தலையைத் திருப்பிக் கொண்டார்கள்.(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) “குஷுபும் முசன்னதா” (சாய்த்துவைக்கப்பட்ட மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்ட சாட்டமானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது.அத்தியாயம் : 505354. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் (பிரேதம் சவக்குழிக்குள் வைக்கப்பட்ட பிறகு அந்த) சவக்குழிக்கு வந்து, அந்தப் பிரேதத்தை வெளியே எடுத்துத் தமது மடியில் வைத்து, அதன் மீது தமது உமிழ்நீரை உமிழ்ந்து, தமது அங்கியையும் அதற்கு அணிவித்தார்கள். (இதற்குக் காரணம் என்னவோ) அல்லாஹ்வே அறிந்தவன்!இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.அதில், “நபி (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபையின் பிரேதம் சவக்குழிக்குள் வைக்கப்பட்ட பிறகு அங்கு வந்தார்கள்…” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.அத்தியாயம் : 505355. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:(நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் இறந்தபோது, அவருடைய புதல்வர் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தம் தந்தைக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அங்கியைத் தருமாறு கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரிடம் தமது அங்கியைக் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தம் தந்தைக்கு இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அவருக்கு இறுதித் தொழுகை நடத்துவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்.அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் எழுந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு(ப் பாவமன்னிப்புக் கோரி) பிரார்த்தனை செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான். “(நபியே!) நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவீராக; அல்லது கோராமலிருப்பீராக. (இரண்டும் சமம்தான்.) அவர்களுக்காக நீர் எழுபது முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை ஒருபோதும் அல்லாஹ் மன்னிக்கமாட்டான்” (9:80) என்றே அல்லாஹ் கூறுகின்றான். நான் எழுபது முறையைவிட அதிகமாக இவருக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன்” என்று சொன்னார்கள்.உமர் (ரலி) அவர்கள், “இவன் நயவஞ்சகனாயிற்றே!” என்று சொன்னார்கள். இருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள். அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் (நபியே!) நீர் தொழுவிக்க வேண்டாம். அவருடைய மண்ணறை அருகேயும் நிற்க வேண்டாம்” எனும் (9:84ஆவது) வசனத்தை அருளினான்.அத்தியாயம் : 505356. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அவற்றில், “(9:84ஆவது வசனம் அருளப்பெற்ற) பிறகு அவர்களுக்குத் தொழுவிப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.அத்தியாயம் : 505357. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:இறையில்லம் கஅபா அருகே மூன்றுபேர் ஒன்றுகூடினர். அவர்களில் “குறைஷியர் இருவரும் ஸகஃபீ குலத்தார் ஒருவரும்” அல்லது “ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்” இருந்தனர். அவர்களது உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாகவே இருந்தது. (ஆனால்,) வயிற்றுச் சதை (தொந்தி) அதிகமாகத்தான் இருந்தது. அவர்களில் ஒருவர், “அல்லாஹ், நாம் சொல்வதைக் கேட்கின்றான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்க, மற்றொருவர், “நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்” என்று சொன்னார். இன்னொருவர், “நாம் உரக்கப் பேசும்போது அவன் கேட்கிறான் என்றால், நாம் மெதுவாகப் பேசும் போதும் அவன் நிச்சயம் கேட்கவே செய்வான்” என்று சொன்னார்.அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்துகொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை” (41:22) எனும் வசனத்தை அருளினான்.– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அத்தியாயம் : 505358. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் உஹுது(ப் போரு)க்காகப் புறப்பட்டுச் சென்றபோது, அவர்களுடனிருந்தவர்களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்துவிட்டனர். (இவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பாக) நபித்தோழர்கள் இரு பிரிவினராகப் பிரிந்துவிட்டார்கள்.அவர்களில் சிலர், “அ(வ்வாறு திரும்பிச் சென்ற)வர்களைக் கொன்றுவிடுவோம்” என்று கூறினர். வேறுசிலர், “இல்லை (அவர்களைக் கொல்லவேண்டாம்)” என்று கூறினர். அப்போதுதான் “உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் நீங்கள் இரு பிரிவினர்களாக உள்ளீர்கள்” (4:88) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.– மேற்கண்ட ஹதீஸ் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.அத்தியாயம் : 505359. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நயவஞ்சகர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறப்போருக்குப் புறப்பட்டுச் செல்லும்போது, அவர்களுடன் செல்லாமல் ஊரிலேயே தங்கிவிடுவார்கள். (அவ்வாறு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல் தங்கிவிட்டதைப் பற்றி அவர்கள் பூரிப்பும் அடைந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (போரிலிருந்து திரும்பி)வந்தால், அவர்களிடம் (போய்,தாம் கலந்துகொள்ளாமல் போனதற்குச்) சாக்குப்போக்குகளைக் கூறி (பொய்ச்) சத்தியம் செய்வார்கள். தாம் செய்யாத (நற்) செயல்களுக்காகத் தாம் புகழப்பட வேண்டுமென்றும் விரும்புவார்கள்.அப்போதுதான், “தாம் செய்த (தீய)வை குறித்துப் பூரித்துக்கொண்டும், தாம் செய்யாதவற்றுக்காகப் பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக்கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பித்தவர்கள் என்று ஒருபோதும் (நபியே!) நீர் எண்ண வேண்டாம்; வதைக்கும் வேதனை தான் அவர்களுக்கு உண்டு” (3:188) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. – இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 505360. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:(மதீனா ஆளுநர்) மர்வான் பின் அல்ஹகம் தம் காவலரிடம், “ராஃபிஉ! நீ இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, “தாம் செய்தவை குறித்து மகிழ்ச்சியடைகின்ற, தாம் செய்யாத (நற்)செயல்களுக்காக (சாதனைகளுக்காக)ப் புகழப்பட வேண்டுமென்று விரும்புகின்ற ஒவ்வொரு மனிதரும் வேதனை செய்யப்படுவார் என்றிருப்பின், நாம் அனைவருமே நிச்சயமாக வேதனை செய்யப்பட வேண்டிவருமே!” என்று (நான் வினவியதாகக்) கேள்” என்று சொன்னார்.(அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று ராஃபிஉ கேட்டபோது) “உங்களுக்கு இந்த வசனம் தொடர்பாக என்ன (குழப்பம்) நேர்ந்தது? இந்த வசனம் வேதக்காரர்கள் தொடர்பாகவே அருளப்பெற்றது” என்று கூறிவிட்டு, “வேதம் வழங்கப்பெற்றோரிடம் நீங்கள் மக்களுக்கு அ(ந்த வேதத்)தை நிச்சயமாகத் தெளிவுபடுத்தி விடவேண்டும்; அதை நீங்கள் மறைக்கக் கூடாது என அல்லாஹ் உறுதிமொழி பெற்றதை (நபியே!) எண்ணிப்பார்ப்பீராக” (3:187) எனும் வசனத்தை ஓதினார்கள்.பிறகு “தாம் செய்த (தீய)வை குறித்துப் பூரித்துக்கொண்டும் தாம் செய்யாதவற்றுக்காகப் பாராட்டப்பட வேண்டும் என விரும்பிக் கொண்டும் இருப்போர் வேதனையிலிருந்து தப்பித்தவர்கள் என்று (நபியே!) ஒருபோதும் நீர் எண்ண வேண்டாம்” (3:188) எனும் வசனத்தையும் ஓதிக்காட்டினார்கள்.மேலும், “நபி (ஸல்) அவர்கள் (யூதர்களை அழைத்து) அவர்களிடம் ஒரு விஷயம் (தவ்ராத்தில் உள்ளதா என்பது) குறித்துக் கேட்டார்கள். அப்போது யூதர்கள் அதை மறைத்துவிட்டு, (உண்மைக்குப் புறம்பான) வேறொன்றை நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்டதற்குச் சரியான தகவலைத் தந்துவிட்டதைப் போன்று காட்டிக்கொண்டும், அதற்காக நபி (ஸல்) அவர்களிடம் பாராட்டை எதிர்பார்ப்பதைப் போன்றும், நபி (ஸல்) அவர்கள் கேட்டதைப் பற்றிச் சொல்லாமல் தாம் மறைத்துவிட்டதைக் குறித்து மகிழ்ச்சியடைந்துகொண்டும் புறப்பட்டுச் சென்றனர்.(அப்போதுதான் மேற்கண்ட (3:188ஆவது) வசனம் அருளப்பெற்றது)” என்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 505361. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அலீ (ரலி) அவர்கள் விஷயத்தில் செய்துவிட்ட இந்தச் செயலை நீங்களாக உங்கள் யோசனைப்படி செய்தீர்களா? அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் கூறிய ஏதேனும் அறிவுரைப்படி செய்தீர்களா?” என்று கேட்டேன்.அதற்கு அம்மார் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கள் அனைவரிடமும் கூறாத ஓர் அறிவுரையை எங்களிடம் மட்டும் கூறவில்லை. மாறாக, நபி (ஸல்) அவர்கள் “என் தோழர்களிடையே பன்னிரண்டு நயவஞ்சகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் எட்டுப்பேர், ஊசித் துவாரத்திற்குள் ஒட்டகம் நுழையாத வரை சொர்க்கத்திற்குள் நுழையமாட்டார்கள். நரக நெருப்பின் ஒரு தீப்பந்தமே அவர்கள் எட்டுப் பேருக்கும் போதுமானதாகும்” என்று கூறினார்கள் என

அத்தியாயம் 50 நயவஞ்சகத் தன்மைகளும் அதற்குரிய தண்டனைகளும் Read More »

அத்தியாயம் 49 பாவமீட்சி

ஸஹீஹ் முஸ்லிம்அத்தியாயம் 49பாவமீட்சி பாடம் : 1 பாவமீட்சி பெறுமாறு வந்துள்ள தூண்டலும் அதைக் கண்டு (இறைவன்) மகிழ்வதும்.5294. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “என்னைக் குறித்து என் அடியான் எப்படி நினைக்கிறானோ அப்படியே நான் அவனிடம் நடந்துகொள்கிறேன். அவன் என்னை நினைவு கூரும்போது அவனுடன் நான் இருப்பேன்” என்று கூறினான்.அல்லாஹ்வின் மீதாணையாக! பாலைவனத்தில் தொலைத்துவிட்ட தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்கும்போது,உங்களில் ஒருவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிட, தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்.யார் என்னிடம் ஒரு சாண் அளவு நெருங்குகிறாரோ, நான் அவரிடம் ஒரு முழம் அளவு நெருங்குகிறேன். யார் என்னிடம் ஒரு முழம் நெருங்குகிறாரோ, நான் அவரிடம் (வலம் இடமாக விரிந்த) இரு கை நீட்டளவு நெருங்குகிறேன். அவர் என்னை நோக்கி நடந்து வந்தால், நான் அவரை நோக்கி ஓடிச்செல்கிறேன் (என்று அல்லாஹ் கூறினான்).இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அத்தியாயம் : 495295. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:காணாமல்போன ஒட்டகத்தைக் கண்டு பிடிக்கும்போது, உங்களில் ஒருவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிட, உங்களில் ஒருவர் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.அத்தியாயம் : 495296. ஹாரிஸ் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காக நான் சென்றேன். அப்போது அவர்கள் எங்களுக்கு இரு ஹதீஸ்களை அறிவித்தார்கள். அவற்றில் ஒன்றைத் தாமாகக் கூறினார்கள். மற்றொன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அவர்கள் சொன்னதாவது:ஒரு மனிதன் (பயணத்தினிடையே ஓய்வெடுப்பதற்காக) ஆபத்துகள் நிறைந்த (வறண்ட) பாலைவனத்தில் (இறங்கி) உறங்கினான். அவனுடன் அவனது வாகன(மான ஒட்டக)மும் இருந்தது. அதில் அவனுடைய உணவும் நீரும் இருந்தன. அவன் (உறங்கிவிட்டு) விழித்தெழுந்தபோது, அவனது ஒட்டகம் (தப்பியோடிப்) போயிருந்தது. அவன் அதைத் தேடிச் சென்றபோது, அவனுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. அவன், “நான் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று சாகும்வரை உறங்கப்போகிறேன்” என்று கூறியபடி (அங்கு திரும்பிச் சென்று) தனது கொடுங்கையில் தலை வைத்துச் சாகும்வரை உறங்கப் போனான்.பிறகு (திடீரென) அவன் விழித்துப் பார்த்த போது, அவனுக்கருகில் அவனது ஒட்டகம் இருந்தது. அதில் அவனது பயண உணவும் நீரும் இருந்தன. அப்போது அவன் தனது ஒட்டகத்தாலும் உணவாலும் அடைகின்ற மகிழ்ச்சியைவிட,இறைநம்பிக்கையுள்ள அடியார் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்கின்றான்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.அதில் (“வறண்ட பாலைவனம்” என்பதைக் குறிக்க “தவிய்யத்” என்பதற்குப் பகரமாக) “தாவியத்” எனும் சொல் இடம்பெற்றுள்ளது.அத்தியாயம் : 495297. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.அதில், “அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் இரு ஹதீஸ்களை எனக்குச் சொன்னார்கள். ஒன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவும், மற்றொன்று தாமாகவும் தெரிவித்தார்கள்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது.அத்தியாயம் : 495298. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் உரையாற்றும்போது, பின்வருமாறு கூறினார்கள்:ஒரு மனிதர் தமது ஒட்டகத்தில் தமது பயண உணவையும் தோல் பையையும் ஏற்றிக்கொண்டு பயணம் செய்தார். வறண்ட பாலைவனத்தில் அவர் சென்றுகொண்டிருந்த போது, மதிய ஓய்வு நேரம் வரவே, அவர் இறங்கி, ஒரு மரத்தின் கீழ் தம்மையும் அறியாமல் உறங்கிவிட்டார். அப்போது அவரது ஒட்டகம் தப்பியோடியது. அவர் விழித்தெழுந்தபோது (ஒட்டகத்தைக் காணாததால்) ஓடிப்போய் ஒரு குன்றின் மேலேறிப் பார்த்தார். எதையும் அவர் காணவில்லை. பிறகு மற்றொரு குன்றின் மீதேறிப் பார்த்தார். அங்கும் எதையும் காணவில்லை. பிறகு வேறொரு குன்றின் மீதேறிப் பார்த்தார். எதையும் காணவில்லை.ஆகவே, முன்பு ஓய்வெடுத்த இடத்துக்கே திரும்பிவந்து அமர்ந்துகொண்டார். அப்போது அவரது ஒட்டகம் அவரை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது வந்து தனது கடிவாளத்தை அவரது கையில் இட்டது. இந்த நிலையில் அவர் தனது ஒட்டகத்தைக் காணும்போது அடைந்த மகிழ்ச்சியைவிடத் தன் அடியார் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.இதை நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்கள் என ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ஆனால், நுஅமான் (ரலி) அவர்கள் அவ்வாறு கூறியதை நான் (சிமாக்) செவியுறவில்லை.அத்தியாயம் : 495299. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “ஒரு மனிதர் உணவோ நீரோ கிடைக்காத வறண்ட பாலைவனத்தில் (ஓய்வெடுத்துக்கொண்டு) இருந்தபோது, அவரது ஒட்டகம் தனது கடிவாளத்தை இழுத்துக்கொண்டு ஓடிவிட்டது. அந்த மனிதரின் உணவும் பானமும் அதன் மீதே இருந்தன. அந்த மனிதர் அதைத் தேடிப் புறப்பட்டார். அதனால் அவர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். (ஓடிப்போன) அந்த ஒட்டகம் ஒரு மரத்தைக் கடந்தபோது அதன் கடிவாளம் அந்த மரத்தின் வேரில் மாட்டிக்கொண்டது. அதில் சிக்கிக்கொண்டு இருந்தபோது அந்த மனிதர் அதைக் கண்டார். அப்போது அந்த மனிதர் அடையும் மகிழ்ச்சியைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.அதற்கு நாங்கள், “மிகவும் அதிகமாக (மகிழ்ச்சி அடைந்திருப்பார்), அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! தனது ஒட்டகத்தைக் கண்ட அந்த மனிதர் அடையும் மகிழ்ச்சியை விடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெறுவதால் அல்லாஹ் அதிகமாக மகிழ்ச்சி அடைகிறான்” என்று சொன்னார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 495300. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவர் வறண்ட பாலைவனத்தில் ஒட்டகத்தில் பயணம் மேற்கொண்டார். (அவர் ஓரிடத்தில் இறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது) அவரது ஒட்டகம் தப்பியோடி விட்டது. அதன் மீதே அவரது உணவும் பானமும் இருந்தன. அவர் (தமது ஒட்டகத்தைத் தேடியலைந்து அதைக் கண்டுபிடிக்க முடியாமல்) நம்பிக்கையிழந்து, ஒரு மரத்திற்கு அருகில் வந்து, அதன் நிழலில் படுத்திருந்தார்.தமது ஒட்டகத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் அதே நிலையில் அவர் நிராசையுடன் இருந்தபோது, அந்த ஒட்டகம் (வந்து) தமக்கு அருகில் நிற்பதை அவர் கண்டார். உடனே அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டார். பிறகு மகிழ்ச்சிப் பெருக்கால் அவர், (“இறைவா! நீ என் இறைவன்; நான் உன் அடிமை” என்று சொல்வதற்குப் பதிலாக) “இறைவா! நீ என் அடிமை; நான் உன் இறைவன்” என்று தவறுதலாகச் சொல்லிவிட்டார். இந்த மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.அத்தியாயம் : 495301. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வறண்ட பாலைவனத்தில் தொலைந்து போய்விட்ட தமது ஒட்டகத்தை உறங்கியெழும்போது கண்டுபிடித்த மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி, தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.அத்தியாயம் : 49பாடம் : 2 பாவமன்னிப்புக் கோரி பாவமீட்சி பெறுவதால் பாவங்கள் அகன்றுவிடுகின்றன.5302. அபூஸிர்மா மாலிக் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்களுக்கு இறப்பு நெருங்கியபோது, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு செய்தியை உங்களிடம் கூறாமல் மறைத்துவைத்திருந்தேன். (அதை இப்போது உங்களிடம் கூறுகிறேன்:)அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்து விட்டால், நிச்சயமாகப் பாவம் செய்கின்ற ஒரு படைப்பை அல்லாஹ் உருவாக்கி அவர்களுடைய பாவங்களை அவன் மன்னிக்கவே செய்வான் என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.அத்தியாயம் : 495303. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நீங்கள் பாவங்கள் செய்து, அவற்றை அல்லாஹ் உங்களுக்கு மன்னிக்கும் நிலை இல்லாதிருந்தால், பாவங்கள் செய்யும் மற்றொரு சமுதாயத்தை அல்லாஹ் கொண்டு வருவான்; அப்பாவங்களை அவர்களுக்கு மன்னிக்கவும் செய்வான்.இதை அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அத்தியாயம் : 495304. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றிவிட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அத்தியாயம் : 49பாடம் : 3 எல்லா நேரங்களிலும் இறைவனை நினைவுகூரல், மறுமை நிகழ்வுகளைச் சிந்தித்தல், இறைவன் கண்காணிக்கிறான் என உணர்தல் ஆகியவற்றின் சிறப்பும், சில நேரங்களில் இந்த உணர்வுகளிலிருந்து விடுபட்டு இம்மை விவகாரங்களில் ஈடுபடலாம் என்பதும்.5305. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எழுத்தர்களில் ஒருவரான ஹன்ழலா பின் அர்ரபீஉ அல்உசைதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:(ஒரு நாள்) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, “ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஹன்ழலா நயவஞ்சகனாகிவிட்டான்” என்று சொன்னேன். அதற்கு “அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?”என்று கேட்டார்கள். அதற்கு நான், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் துணைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம்.(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்” என்று சொன்னேன்.அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றோம்.நான், “அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப்

அத்தியாயம் 49 பாவமீட்சி Read More »